நாங்கள் சரியான பாதையில் இருக்கிறோம்: ஜெலன்ஸ்கி உடன் பேச்சு குறித்து டிரம்ப் தகவல்
நாங்கள் சரியான பாதையில் இருக்கிறோம்: ஜெலன்ஸ்கி உடன் பேச்சு குறித்து டிரம்ப் தகவல்
ADDED : மார் 20, 2025 06:56 AM

வாஷிங்டன்: நாங்கள் மிகவும் சரியான பாதையில் இருக்கிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இந்தப் போரை நிறுத்துவதற்கான முயற்சியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அவர் பல முறை பேச்சு நடத்தினார்.
இது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் மிகச் சிறந்த முறையில் தொலைபேசியில் பேசினேன். ஒரு மணி நேரமாக கலந்துரையாடல் நீடித்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளையும் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் போரை முடிவுக்கு கொண்டுவதற்காக, புடினுடன் பேசியது குறித்து பெரும்பாலான விவாதம் நடந்தது.
நாங்கள் மிகவும் சரியான பாதையில் இருக்கிறோம், மேலும் விவாதிக்கப்பட்டது குறித்து துல்லியமான விளக்கத்தை வழங்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோரிடம் கேட்டுக்கொள்வேன். அந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.