பாரிசில் பதற்றம்; கால்பந்து ரசிகர்கள் கலவரத்தில் 2 பேர் பலி; 559 பேர் கைது
பாரிசில் பதற்றம்; கால்பந்து ரசிகர்கள் கலவரத்தில் 2 பேர் பலி; 559 பேர் கைது
ADDED : ஜூன் 03, 2025 04:31 AM
பாரிஸ் : சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில், பி.எஸ்.ஜி., எனப்படும் பாரிஸ் 'செயின்ட் ஜெர்மென்' அணி கோப்பையை வென்றது தொடர்பாக, பாரிசில் நடந்த கொண்டாட்டத்தின்போது, ரசிகர்கள் இடையே நடந்த கலவரத்தில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்டதாக, 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபலமான கால்பந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி, ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்தது.
இதில் இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி., அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின.
இதில், 5- - 0 என்ற கோல் கணக்கில், பி.எஸ்.ஜி., அணி வென்றது.
இந்தப் போட்டி, ஐரோப்பிய நாடான பிரான்சின் பல இடங்களில் பெரிய திரைகளில், நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
இவ்வாறு பாரிசின் முக்கிய பகுதியான சாம்ப்ஸ் - எலிசஸ் அவின்யூ பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட திரையில் ஒளிபரப்பான போட்டியை, நுாற்றுக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பி.எஸ்.ஜி., அணி வெற்றி பெற்றபின், ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இது, பெரும் கலவரமாக மாறியது.
இதில், 192 பேர் காயமடைந்ததாகவும், 264 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், கூறப்படுகிறது. இதைத்தவிர, 692 இடங்களில், பட்டாசுகள் வெடித்ததால், ரசிகர்கள் தீ வைத்ததால், தீ விபத்து ஏற்பட்டது.
இவ்வாறு நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த கலவரத்தில், 30 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
அவர்களில் சிலர் பலத்த காயம் அடைந்ததாகவும், ஒரு போலீஸ் அதிகாரி பட்டாசு வெடித்து தாக்கப்பட்டதால், கோமா நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, போலீசார் பாரிஸ் முழுதும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பாரிசில் 491 பேர் உட்பட, பிரான்சில், 559 பேர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாரிஸ் உட்பட பல பகுதிகளில் தொடர்ந்து பதற்ற நிலை நீடிக்கிறது.