கலக தடுப்பு சட்டத்தை பயன்படுத்துவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
கலக தடுப்பு சட்டத்தை பயன்படுத்துவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
ADDED : ஜூன் 12, 2025 06:24 AM

வாஷிங்டன்: சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் துவங்கிய போராட்டங்கள், பல நகரங்களுக்கும் விரிவடைந்துள்ளது. இந்நிலையில், கலகத் தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி, ராணுவத்தை அனுப்புவேன் என, அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை, கடந்த ஜன.,ல் பதவியேற்றதில் இருந்து மேற்கொண்டு வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
இதன் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், சட்டவிரோதமாக தங்கியுள்ளோர் குறித்து, குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
இவ்வாறு கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகள் சென்றனர். அங்கு, மற்ற நாடுகளில் இருந்து வந்து, பல தலைமுறையாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் அதிகம் உள்ளனர். இவர்களுடன், சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களும் உள்ளனர்.
தாங்கள் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்தில், இவர்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்ததால், போராட்டம் தீவிரமானது. இது வன்முறையாக உருமாறியது.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, இந்தப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைத் தடுக்க, 4,000 அதிரடிப் படை போலீசை டிரம்ப் முதலில் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, ராணுவத்தின் ஒரு பிரிவான, மரைன் படை வீரர்கள் 700 பேர் அனுப்பப்பட்டனர்.
இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, அரசியல் ரீதியிலும் இந்தப் பிரச்னை தீவிரமானது. குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்பின் நடவடிக்கைக்கு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா மாகாண கவர்னர் காவின் நியூசம், லாஸ் ஏஞ்சலஸ் மேயர் காரன் பாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது:
வெளிநாட்டு எதிரிகளான, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மிருகங்கள், நம் நாட்டுக்கு எதிரானவர்கள்.
வெளிநாட்டு எதிரிகள், அமெரிக்காவுக்குள் படையெடுத்து வெற்றி பெற அனுமதிக்க மாட்டேன். அதுதான் தற்போது நடந்து வருகிறது.
அரசின் நடவடிக்கையை எதிர்த்து நடக்கும் போராட்டம் கலகமாக மாறினால், 1807ம் ஆண்டு கலகத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த தயங்க மாட்டேன். இந்த சட்டத்தின்படி, நாட்டின் எந்தப் பகுதியிலும் நாட்டுக்கு எதிராக கலகம் நடந்தால், ராணுவத்தை அனுப்ப அதிபருக்கு அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.