/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
தென்னங்கீற்றில் சுற்றுச்சூழலுக்கு உகந்த 'ஸ்ட்ரா'
/
தென்னங்கீற்றில் சுற்றுச்சூழலுக்கு உகந்த 'ஸ்ட்ரா'
ADDED : ஜூன் 28, 2025 11:14 PM

இயற்கையின் படைப்பில் எதுவும் வீணாகாது என்பது உதாரணமாக, தென்னை இலையில் இருந்து 'ஸ்ட்ரா' தயாரித்து, 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளார் உதவி பேராசிரியர் சாஜி வர்க்கீஸ்.
உலகில் பல்வேறு வண்ணங்கள், வடிவங்களில் உள்ள பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், வெறும் குளிர் பானங்கள் குடிக்க மட்டுமல்ல. அவைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கருவிகளாகும்.
அப்படியானால் காகித ஸ்ட்ராக்களில் குடிக்கலாம் என்று கேள்வி எழுப்புவீர்கள். அதில் குளிர்பானங்கள் குடிக்கலாம். ஆனால், காகிதம் சில நிமிடங்கள் மட்டுமே நீரில் ஊறும். அதன்பின், புதிதாக மற்றொரு காகித ஸ்ட்ராவை எடுப்பீர்கள். அத்துடன், காகிதம் கரைவதால், அதிலுள்ள ரசாயனம், நீங்கள் குடிக்கும் பானத்தில் குடிப்பதை பற்றி யோசித்துள்ளீர்களா?
இதற்கு கிறைஸ்ட் கல்லுாரியில் ஆங்கில வகுப்பு உதவி பேராசிரியர் சாஜி வர்க்கீஸ், 55, விடையை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
எங்கள் கல்லுாரி வளாகத்தில் உள்ள தென்னை மரங்களில் இருந்து தென்னங்கீற்றுகள் காய்ந்து கீழே விழும். இவ்வாறு விழும் கீற்றுகளை ஊழியர்கள் அகற்றுவதில்லை. மாறாக, காய்ந்த இலைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தீ வைத்து கொளுத்துவர்.
இவ்வாறு கொளுத்தப்படுவதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. 2017ம் ஆண்டு கீழே விழுந்திருந்த உலர்ந்த தென்னங்கீற்றை எடுத்து பார்த்த போது, அதுவே, 'ஸ்ட்ரா' போன்று மடித்து இருந்தது. அதை ஆய்வகத்துக்கு எடுத்து சென்று, அதிக அழுத்தத்தில் ஆவியில் வேகவைத்தபோது, இயற்கையான பளபளப்பான அடுக்கை உருவானது.
அடுத்த சில மாதங்களில், தென்னை இலைகளை பயன்படுத்தி பரிசோதனை செய்து, உணவு தர பசையால் பிணைத்து, ஸ்ட்ராவை கண்டுபிடித்தேன். மேலும் அது குறித்து ஆய்வு செய்த வந்தேன்.
கடந்த 2020ல் 'சன்பேர்டு ஸ்ட்ராஸ்' என்ற நிறுவனத்தை, சிராக், சந்தீப் ஆகிய இரு மாணவர்களுடன் இணைந்து, துவக்கினேன். இன்று கர்நாடகா, தமிழகம், கேரளாவில் இந்நிறுனத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மாதந்தோறும் ஏழு லட்சம் ஸ்ட்ராக்கள் தயாரிக்கின்றனர்.
தென்னை இலைகள் நீளமாகவும், அகலம் குறைவாகவும் உள்ளதால், அதை ஸ்ட்ரா போன்று சுலபமாக உருட்டலாம்.
இந்த இலைகளில் இயற்கையான மெழுகு உள்ளது. இதனால், நீர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு சக்தியாக மாறுகிறது. இவை குடிக்கும் ஸ்ட்ராக்களில் இருக்க வேண்டிய இரு முக்கியமான பண்புகள். தற்போது அன்னாசி பழத்தின் இலைகளிலும் ஸ்ட்ராக்கள் தயாரிக்க துவங்கி உள்ளோம்.
தமிழகம் கன்னியாகுமரி, நாகர்கோவில், பொள்ளாட்சி, பாலக்காடு, கேரளாவில் காசர்கோடு, பாலக்காடுகளில் இருந்து மாதந்தோறும் 9,000 கட்டுகள் கொண்ட உதிர்ந்த இலைகளை வாங்குகிறோம்.
வாங்கப்படும் இலைகளை முதலில் சுத்தமாக்கப்படும். பின், அனைத்தும் ஒரே அளவில் வெட்டப்படும். பின், இலைகளில் உள்ள 'எபிகுட்டிகுலர் மெழுகுவை' மேற்பரப்பில் கொண்டுவர, வேக வைக்கப்படும். ஸ்ட்ரா உற்பத்தி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பல அடுக்கு ஸ்ட்ராக்களாக உருட்டப்படுகின்றன.
இத்தகைய ஸ்ட்ராக்கள் உருவாக்க ஓராண்டுக்கு மேலானது. இதற்கு நம் நாட்டின் காப்புரிமையை பெற்றேன். தற்போது மூன்றாம் தலைமுறை இயந்திரங்கள் மூலம், நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் ஸ்டராக்கள் தயாரிக்கிறோம்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுதும் சென்றடையும் வகையில் மாதம் 60 லட்சம் ஸ்ட்ராக்கள் உற்பத்தி செய்து, 500 பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், விபரங்களுக்கு https://sunbirdstraws.com/ என்ற இணையதளத்திலோ அல்லது 90350 78109 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் -