/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
கான்பூர் ஐ.ஐ.டி.,யில் படிக்க தேர்வான மெக்கானிக் மகன்
/
கான்பூர் ஐ.ஐ.டி.,யில் படிக்க தேர்வான மெக்கானிக் மகன்
கான்பூர் ஐ.ஐ.டி.,யில் படிக்க தேர்வான மெக்கானிக் மகன்
கான்பூர் ஐ.ஐ.டி.,யில் படிக்க தேர்வான மெக்கானிக் மகன்
ADDED : ஜூன் 28, 2025 11:13 PM

மனிதனிடம் இருந்து எல்லாவற்றையும் திருடலாம். ஆனால் அவனது கல்வியை திருட முடியாது என்ற பழமொழி உண்டு. கல்வி தான் தற்போது மக்களை காக்கும் பெரும் ஆயுதமாக உள்ளது. இந்நிலையில் கல்வி என்ற ஆயுதத்தால் பைக் மெக்கானிக் மகன் ஒருவருக்கு கான்பூர் ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. அவரை பற்றி பார்க்கலாம்.
ஷிவமொக்காவின் தீர்த்தஹள்ளி மேகரவள்ளி கிராமத்தை சேர்ந்த நரசிம்ம பிரபு - சுஜாதா தம்பதியின் மகன் சுஷாந்த் பிரபு. நரசிம்ம பிரபு பைக் மெக்கானிக்காக உள்ளார். மேகரவள்ளி கிராமத்தில் சிறிய மெக்கானிக் கடை நடத்துகிறார். சிறு வயதில் இருந்தே சிறப்பாக படித்த சுஷாந்த் பிரபு ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்றதால், கான்பூர் ஐ.ஐ.டி.,யில் வேதியியல் பொறியியல் பி.டெக் படிக்க சீட் கிடைத்து உள்ளது.
சுஷாந்த் பிரபு கூறியதாவது:
எனது அப்பா நரசிம்ம பிரபு மெக்கானிக்காக உள்ளார். அவருக்கு உதவி செய்ய அடிக்கடி மெக்கானிக் ஷாப் செல்வேன். சர்வீஸுக்கு வரும் பைக்குகளை, தந்தையின் ஆலோசனை கேட்டு சரி செய்து கொடுப்பேன். நான் பயன்படுத்திய ஒரு பைக்கின் செயின் அடிக்கடி அறுந்து விழுந்தது. இதனால் அந்த செயினை அகற்றிவிட்டு, நானே புதிய மாடலில் ஒரு செயின் வடிவமைத்தேன்.
பத்தாம் வகுப்பு வரை மேகரவள்ளியில் உள்ள அரசு பள்ளியில் படித்தேன். குடும்ப சூழ்நிலையால் பி.யு., படிக்க முடியாத நிலை இருந்தது. ஆனால் 'ராஷ்ட்ரோத்தன் சன்ஸ்தா' என்ற அமைப்பு நடத்திய, பொது அறிவு தேர்வில் வெற்றி பெற்றதால், பெங்களூரில் தனியார் கல்லுாரியில் பி.யு., இலவசமாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆசிரியர்கள் உதவியுடன் ஜே.இ.இ., போட்டி நுழைவு தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். தற்போது கான்பூர் ஐ.ஐ.டி.,யில் வேதியியல் பொறியியல் பி.டெக் படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுஷாந்த் தந்தை நரசிம்ம பிரபு கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே சுஷாந்திற்கு படிப்பு மீது ஆர்வம் இருந்தது. ஓவியம் வரைவதுடன், யக் ஷகானா நாடகங்களிலும் நடித்தார். அவர் என்ன செய்தாலும், நாங்கள் அதற்கு ஆதரவாக இருந்தோம். மெக்கானிக் ஷாப்புக்கு வர வேண்டாம் என்று கூறினாலும் கேட்க மாட்டார். எனக்கு உதவி செய்வார். ஐ.ஐ.டி.,க்கு தேர்வு ஆவார் என்று நினைத்து பார்க்கவில்லை. இதற்கு அவரது ஆசிரியர்கள் உதவினர். எதிர்காலத்தில் சமூகத்திற்கு அவர் சேவை செய்யட்டும்.
எங்கள் குடும்பத்தில் உள்ள வறுமை சூழ்நிலையில், சுஷாந்த்தை பெரிய படிப்பு படிக்க வைத்திருக்க முடியாது. நிறைய பேரின் உதவியால் இந்த நிலைக்கு சுஷாந்த் வந்து உள்ளார். எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்
-நமது நிருபர்- .