/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
சேமித்த பணத்தை நற்பணிகளுக்கு செலவிடும் மஞ்சுளா
/
சேமித்த பணத்தை நற்பணிகளுக்கு செலவிடும் மஞ்சுளா
ADDED : ஜூன் 28, 2025 11:11 PM

பிறப்பு எதிர்பாராதது, இறப்பு உறுதியானது. இந்த இரண்டுக்கும் இடையே வாழ்க்கை சொற்ப காலம். நாம் செல்லும் போது, இங்கிருந்து எதையும் கொண்டு செல்வதில்லை. வாழும் நாட்களில் நல்லதை செய்ய வேண்டும். இதை சிலர் மட்டுமே புரிந்து கொண்டு செயல்படுகின்றனர். சமுதாயத்துக்காக வாழ்கின்றனர்.
மைசூரு மாவட்டம், வருணா தாலுகாவின், குடு மாதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா மஞ்சுநாத். இவர் மக்களுக்கு சேவை செய்வதில், அதிக ஆர்வம் காட்டுகிறார். பொதுவாக கணவர் சம்பாதிக்கும் பணம் மிச்சமானால், பல பெண்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவர். வீட்டின் தேவைக்கு பயன்படுத்துவர்.
ஆனால் மஞ்சுளா மஞ்சுநாத், பணத்தை வீணாக்காமல் மிச்சப்படுத்தி, அதை நற்பணிகளுக்கு பயன்படுத்தி, மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.
தற்போது தன் பிறந்த நாளை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியுள்ளார். தன் கிராமத்தின் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, உதவும் நோக்கில் சுத்த குடிநீர் மையம் அமைத்துள்ளார். இதற்காக 20,000 ரூபாய் செலவிட்டுள்ளார். இம்மாதம் 24ம் தேதியன்று, சுத்தகுடிநீர் மையம் திறக்கப்பட்டது. அன்றைய தினம் ஆசிரியர்கள், மஞ்சுளா மஞ்சுநாத்தை கவுரவித்தனர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மஞ்சுளா கூறியதாவது:
நான் புத்தர், பசவண்ணர், அம்பேத்கரின் விசுவாசி. பணத்தை வீணாக்காமல் மக்களின் நலனுக்காக பயன்படுத்துகிறேன். எங்கள் கிராமத்தின் தொடக்கப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக, சுத்த குடிநீர் மையம் அமைத்தேன்.
இனி வரும் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், இதே போன்று சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பது என் குறிக்கோள். என் ஆயுட் காலம் வரை. மற்றவருக்கு பயனுள்ள வகையில் வாழ்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் .