ADDED : ஜூன் 11, 2025 11:50 PM

கர்நாடகாவில் 35 நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான ஹெப்பே நீர்வீழ்ச்சி, சிக்கமகளூர் நகரில் உள்ள புகழ்பெற்ற கெம்மங்ஹூன்டியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் அமைந்து உள்ளது.
இந்த நீர்வீழ்ச்சிகள், 551 அடி உயரத்தில் இருந்து, 'தொட்ட ஹெப்பே, சிக்க ஹெப்பே' என இரண்டு நீர்வீழ்ச்சிகளாக உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளதால், நடந்தோ அல்லது நான்கு சக்கர வாகனத்தில் சென்றடையலாம்.
இயற்கை ஆர்வலர்களும், சாகச பிரியர்களும் விரும்பும் இடங்களில் இந்த நீர்வீழ்ச்சியும் ஒன்று. தொழில்முறை மலையேற்ற பயணியர், தரிகெரேயில் இருந்து தங்கள் மலையேற்றத்தை துவங்குவர். 35 கி.மீ., துாரத்தை கடந்து, கெம்மன்ஹூண்டியை அடைய, ஒரு நாளாகும்.
இப்பாதையில் கவர்ச்சியான காபி தோட்டங்கள், வளமான தாவரங்கள், விலங்குகள் இருப்பதால், மலையேற்ற பயணியரின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.
குறுகிய துார மலையேற்றத்துக்கு, வனத்துறையின் சோதனை சாவடிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம். செல்லும் வழியில் இயற்கையின் அழகை ரசிக்க முடியும். இப்பாதையில் அட்டை பூச்சிகள் நிரம்பியிருப்பதால், குறிப்பாக மலை காலத்தில் அவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, மலையேற்றத்தின் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் ஒரு குளம், மூன்று நீரோடைகளை கடக்க வேண்டும். ஓடையில் நீராடிய பின், அருகிலுள்ள சவுடேஸ்வரி மஹாசக்தி தேவதை கோவிலை தரிசிக்கலாம். இங்கு அதிகளவில் யானைகள் கூட்டமாக வருமாம்.
சாகசத்தில் விருப்பம் இல்லாதவர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் எஸ்டேட் வழியாக, வன ஜீப்பில் செல்லலாம். ஜீப்பில் செல்ல ஒரு மணி நேரமாகும். ஜீப்பில் கோடேஸ் எஸ்டேட் சென்று, அங்கிருந்து 1 கி.மீ., தொலைவுக்கு மலையேற வேண்டும். மலையேறினால், நீங்கள் ஆர்வமுடன் பார்க்க துாண்டிய இரு நீர்வீழ்ச்சிகளையும் காணலாம்.
நீர்வீழ்ச்சியை அடைய குறுகிய, செங்குத்தான பாதையில் சவாரி செய்ய வேண்டும். இந்த நீர்வீழ்ச்சி தண்ணீர் மருத்துவ குணம் கொண்டது என்று கூறப்படுகிறது. இது இயற்கையாக தோன்றிய, 'ஜக்குசி' போன்றதாகும். இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி, புத்துணர்ச்சி பெறலாம்.
மழை காலத்தில் செல்லும் போது, நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டும். இதன் ஒலியை, தொலைவில் இருந்து வரும்போதே நீங்கள் உணர்வீர்கள்.
அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில், நீர்வீழ்ச்சியை பார்வையிடுவது சிறந்தது. இந்நேரத்தில் நீர்மட்டம் அதிகமாகவும், பசுமையான சூழலையும் அனுபவிக்க முடியும். இருப்பினும், மழை காலங்களில் சுற்றிப்பார்க்கலாம்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. ஆனால், கெம்மன்ஹூண்டியில் இருந்து ஜீப்பில் 6 முதல் 8 பேர் கொண்ட குழுவுக்கு, 3,200 ரூபாய் வசூலிக்கின்றனர்.
காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை பார்வையிடலாம்.
- நமது நிருபர் -