/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மனதை கொள்ளை கொள்ளும் ஷிராடி காட்
/
மனதை கொள்ளை கொள்ளும் ஷிராடி காட்
ADDED : ஜூன் 11, 2025 11:49 PM

இயற்கை ஆர்வலர்கள், சுற்றுலா பயணியரை ஷிராடி காட் கை வீசி அழைக்கிறது. சாலையின் இரண்டு ஓரங்களிலும், பசுமையான இயற்கை காட்சிகள் மனதை கொள்ளை கொள்கிறது.
இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காகவே, சிலர் வெளிநாடுகளை சுற்றி வருவதுண்டு. ஆனால் கர்நாடகாவிலேயே வெளிநாடுகளை மிஞ்சும் அளவுக்கு, இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது. இவற்றில் ஷிராடி காட்டும் ஒன்றாகும்.
தட்சிண கன்னடாவின், மங்களூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின், அட்டஹொளேவில் இருந்து, ஷிராடி காட் வரையிலான சாலையில் சென்றால், திரும்பி செல்லவே மனம் வராது.
அட்டஹொளேவில் இருந்து ஷிராடி காட் வரை, 12 கி.மீ., சாலையில், இரண்டு ஓரங்களிலும், அடர்த்தியான வனப்பகுதி உள்ளது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை, பச்சை பசேல் காட்சிகள் மனதை மகிழ்விக்கும். இயற்கை ஆர்வலர்களுக்காகவே உருவான இடம் போன்றுள்ளது.
நெடுஞ்சாலை துறை, இந்த சாலையின் சில கி.மீ., வரை கிரீன் காரிடார் அமைத்துள்ளது. டிவைடர்களில் பசுமையான போர்டுகள் வைத்து, சாலையின் அழகை அதிகரித்துள்ளது. ஷிராடி காட் சாலையில் பயணிக்கும் போது, வெளிநாட்டு சாலைகளில் பயணித்த அனுபவத்தை உணரலாம். இதே சாலையில் மிக உயரமான ஷிராடி காட் சிகரங்களை காணலாம். வானுயரத்துக்கு வளர்ந்துள்ள மரங்கள், காற்றில் அங்கும், இங்கும் அசைந்தாடும் போது, நம்மை கை வீசி அழைப்பதை போன்று தென்படும்.
இந்த சாலை வழியாக வாகனத்தில் பயணிப்போர், வழியில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி, போட்டோ, வீடியோ எடுப்பதை காணலாம். தற்போது மழை பெய்வதால், ஷிராடி காட் சாலை சொர்க்க லோகம் தரையிறங்கி வந்ததை போன்று காணப்படுகிறது.
இந்த பகுதியில் காட்டு யானைகள் அதிகம். எனவே நெடுஞ்சாலையின அட்டஹொளே மற்றும் ஷிராடிகாட் பகுதியில் யானைகள் நடந்து செல்ல பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் யானைகள் நடந்து செல்வதை மக்கள் காணலாம். அவற்றை யாரும் தொந்தரவு செய்ய கூடாது.
- நமது நிருபர் -