/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
படகு சவாரி பிரியர்களுக்கு பிடித்தமான வருணா ஏரி
/
படகு சவாரி பிரியர்களுக்கு பிடித்தமான வருணா ஏரி
ADDED : ஜூன் 11, 2025 11:48 PM

மைசூரு என்றாலே சுற்றுலா பயணியருக்கு முதலில் நினைவுக்கு வருவது அரண்மனை, வன உயிரியல் பூங்காவும் தான். இதற்கு அடுத்தபடியாக சாமுண்டி மலையில் அமைந்து உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்ல முக்கியத்துவம் கொடுப்பர். அரண்மனை, வன உயிரியல் பூங்காவை தவிர மைசூரில் சுற்றி பார்க்க நிறைய சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் ஒன்று வருணா ஏரி.
இயற்கையை ரசிப்பவர்கள், சாகசம் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு, இந்த ஏரி ஏற்ற இடமாக உள்ளது. மைசூரின் லலிதா மஹால் அரண்மனையில் இருந்து சுமார் 6 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது. இங்கு படகு சவாரி உள்ளது. இது தவிர கயாக்கிங், ஜெட்ஸ்கை, பெடல் போட் உள்ளிட்ட நீர்சாகச விளையாட்டுகளும் விளையாடலாம். 'வாட்டர் டிராம்போலைன்' என்ற விளையாட்டு சுற்றுலா பயணியரால் அதிகம் விரும்பப்படுகிறது.
ஏரியின் நடுப்பகுதிக்கு சென்று, படகில் இருந்து ஏரிக்குள் குதிக்கலாம். உயிர்காக்கும் உடைகளும் வழங்கப்படும். இதுபோல பனானா ரைடு என்ற சவாரியும் உள்ளது.
வாழை பழம் மாடலில் இருக்கும், ரப்பர் படகில் அமர்ந்து பயணிக்கலாம். அந்த படகு தண்ணீரில் வழுக்கி செல்லும் போது, படகில் இருந்து தண்ணீரில் வழுக்கி விழுவதை சுற்றுலா பயணியர் லைக் செய்கின்றனர்.
ஒவ்வொரு சவாரிக்கும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் உள்ளது. அனைத்து சவாரியும் அரை மணி நேரம் தான். 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை. நகர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, ஒரு நாள் அமைதியை விரும்புவர்களுக்கு இந்த ஏரி ஏற்ற இடமாக இருக்கும். ஏரியில் படகு சவாரி தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இருக்கும்.
பெங்களூரில் இருந்து வருணா 153 கி.மீ., துாரத்தில் உள்ளது. பெங்களூரு சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து, மைசூருக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில் சேவையும் உள்ளது. மைசூரு பஸ் நிலையத்தில் இருந்து வருணாவுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன
- நமது நிருபர்-.