PUBLISHED ON : ஜூன் 22, 2025

நம் ரசனை திருவோட்டில் ஒத்த ரூபாய் இடாத குபேரா!
'பிச்சைக்காரனா... உலகமறியா அப்பாவியா... எப்படி நம்மை திரையில் வெளிப்படுத்துவது' எனும் குழப்பம் தனுஷுக்கு; தலையில் அடிபட்டு சித்தம் கலங்கியது போல் அவர் கதை முழுக்க திரிய, திரைக்கதையோ அவருடன் போட்டி போட்டு தலைகீழாய் அலைகிறது!
நான்கு பிச்சைக்காரர்களை அழைத்து வந்து பெரும் பணக்காரனுக்கு பினாமியாய் மாற்றி, கறுப்பு பணம் கைமாற்றும் கேவலமான கதை. எந்த பாத்திரம் என்றாலும் நடிப்பில் மின்னும் நபர் 'நடிகர்' எனில், பிச்சைக்காரனாய் நடிக்கத் திணறும் தனுஷ் இனி எந்தவகையில் நடிகர்?
ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையத்தில் பேருந்தின் கூரையில் 'யாரும் அறியாதபடி' ஏறி படுப்பது, படுத்தவுடன் பேருந்து கிளம்புவது, கூட்டமாய் கொல்ல வரும் அடியாட்களில் ஒருவனை வீழ்த்தி அவனது சீருடையை அணிந்து கொண்டு அவன் கூட்டத்தை சுட்டு வீழ்த்துவது... இந்த 'கறுப்பு - வெள்ளை' காலத்து காட்சிகளில் கடைசியாய் சொன்னதை நாகர்ஜூனா செய்கிறார்; மற்றதிற்கு தனுஷ் பொறுப்பு!
வாழ்க்கை, பிழைப்பு பற்றி தனுஷ் பேசும் ஒரு வசனம், நமக்கு என்ன புரிய வைப்பதற்காக எழுதப்பட்டது என்பது இரண்டு, மூன்று முறை அவர் உருட்டியும் பிடிபடவில்லை. பிச்சைக்காரியின் குழந்தை பணக்காரனுக்கு பிச்சை போடும் காட்சி மட்டும், ஆரஞ்ச் மிட்டாயை நீட்டுகிறது.
நாகர்ஜூனா, ராஷ்மிகா, தனுஷ் பாத்திர வார்ப்பில் கடும் குழப்பம். 'குப்பையில் அதீதமாய் புரண்டு கொண்டிருந்தால், சிந்தி சிதறும்படி வாய் நிறைய அள்ளி சாப்பிட்டால், உடையை அழுக்காக்கி அலைந்தால் அவன் பிச்சைக்காரன்' என்ற இயக்குனரின் சிந்தனை... நாற்றம்.
ஆக....
11ம் எண் கொண்ட இருக்கை கிடைத்தாலும் நிச்சயம் உயிரைப் பறித்து விடுவான் இந்த குபேரா!