நாங்க என்ன சொல்றோம்னா...: சிதாரே ஜமீன் பர் (ஹிந்தி)
நாங்க என்ன சொல்றோம்னா...: சிதாரே ஜமீன் பர் (ஹிந்தி)
PUBLISHED ON : ஜூன் 29, 2025

'எல்லாருடைய பின்பகுதியும் ஒரேமாதிரி இருக்காது குல்ஷன்...' இது சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி தாளாளர் கர்தார் பாஜி, கூடைப்பந்து பயிற்சியாளர் குல்ஷன் அரோராவிற்கு கூறும் செய்தி. எதையும் தன் வசதிக்கேற்ப தீர்மானிக்கும் குல்ஷன் மனதில் இது பசுமரத்தாணியாக இறங்குகிறது. இதை அப்படியே ஒரு பெண்மணியிடம் சொல்லப்போய் தர்ம அடி கிடைக்கிறது!
சிறப்பு குழந்தைகளுக்கு கூடைப்பந்து கற்றுத்தர வரும் இந்த குல்ஷன் அக்குழந்தைகளிடம் கற்கும் வாழ்க்கை பாடமே கதை; குல்ஷனாக அமிர் கான்; உயரம் சார்ந்த தாழ்வு மனப்பான்மையால் சப்பைக்கட்டு கட்டும் காட்சி துவங்கி, இறுதியில் தனக்கு வாழ கற்றுத்தந்த பயிற்சியாளர்களை கட்டியணைப்பது வரை பலமுறை 'ஆஹா...' சொல்ல வைக்கிறார்!
'ஒரு வீட்டுல குழந்தைங்க பெரியவங்களா ஆகும்போது அதுவரைக்கும் அங்க இருந்த குழந்தைத்தனம் மறைஞ்சு வீடும் 'பெரிய மனுஷன்' ஆயிடுது. ஆனா, இந்தமாதிரி குழந்தைங்க உள்ள வீடுகளுக்கு எப்பவுமே வயசாகாது!' - இது, சிறப்பு குழந்தைகளின் சிறப்பைச் சொல்லும் வசனமாக ஒலித்தாலும், 'வீட்டிற்கும் குழந்தைத்தனம் உண்டு' என்பதை உணர்த்திய விதத்தில் அழகு. இப்படி சிறப்பு குழந்தைகள் பற்றிய பல பரிமாணங்களை பல காட்சிகள் விளக்குவதால் மனதிற்கு ஒத்தடம் கொடுத்த உணர்வு.
எல்லா மனித மனங்களிலும் ஏதோவொரு 'பயம்' இருக்கும். அதை 'பஞ்சர்' செய்வது அவரவர் கைகளில்தான் இருக்கிறது என்பதை இரு உதாரணங்கள் வழி காட்டியது பெரியவர்களுக்கான கையேடு. 'சந்தோஷம் என்பது வெற்றிக்கான இலக்கை அடைகின்ற ஒவ்வொரு வினாடியிலும் இருக்கிறது' என்று நமக்கு ஞானம் ஊட்டுகின்றனர் இதில் வாழ்ந்திருக்கும் சிறப்பு குழந்தைகள்.
ஆக...
சில படைப்புகள் மட்டுமே முற்றுப்பெறும் முன்பே ஜெயித்து விடும்... இதுபோல!