
பொருள்சார் வசதியையும், புகழையும் வெற்றியாக காண்பிக்கும் திரை நட்சத்திரங்கள் - சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லா அரசியல்வாதிகள்; இவர்களை ஒதுக்கிவிட்டு தங்களுக்கான ஆதர்ச மனிதர்களைப் பற்றி சொல்லும் இவர்கள்... கோவை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியின் மாணவர்கள்!
'வாழும் வசதி அடிப்படையில் லட்சியத்தை முடிவு செய்யாதீர்கள்; லட்சங்களில் சம்பாதித்தாலும் என்னால் மூன்று சப்பாத்திகளே சாப்பிட முடிகிறது. லட்சியம் வேறு; வசதி வேறு!' எனச்சொல்லி என் லட்சிய பாதையை தெளிவாக்கிய சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி சார் என் ஆதர்ச மனிதர்!
- ஈ.ஆதித்யா, விலங்கியல் துறை
இ - காமர்ஸ் துறையில் அலிபாபா நிறுவனத்தின் உயரம் ரொம்ப பெரிது. ஆனால், அதன் நிறுவனர் ஜாக் மா, பள்ளிக்கல்வியில் தோல்வியடைந்து,'வாட்ச்மேன் வேலைக்கு கூட லாயக்கற்றவன்' எனும் அவச்சொல் தாங்கி, தன் கனவை நிஜமாக்கி ஜெயித்தவர். அவரை நான் வழிகாட்டியாக நினைக்கிறேன்!
- ச.சபரிவிஷ்ணு, தாவரவியல் துறை
காட்டுத்தீயை அணைக்க சிட்டுக்குருவி தன் அலகால் நீரெடுத்து வந்ததாக ஒரு ஆப்ரிக்க கதை. இக்கதையை சொல்லி கென்யாவில் சூழலியல் புரட்சி செய்தவர் வாங்காரி மாத்தாய். 'என்னால் என்ன செய்ய முடியும்' என்று சமூக அவலங்களை எண்ணி ஆதங்கப்படுகையில், எனக்குள் வாங்காரி மாத்தாய் அக்கதை சொல்லத் துவங்கி விடுகிறார்!
- ம.ரவிவர்மா, கணினி அறிவியல் துறை