/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கட்டுமான பணிகளை துவங்கும் முன் மண் பரிசோதனை செய்வது அவசியமா?
/
கட்டுமான பணிகளை துவங்கும் முன் மண் பரிசோதனை செய்வது அவசியமா?
கட்டுமான பணிகளை துவங்கும் முன் மண் பரிசோதனை செய்வது அவசியமா?
கட்டுமான பணிகளை துவங்கும் முன் மண் பரிசோதனை செய்வது அவசியமா?
ADDED : செப் 13, 2025 07:30 AM

சொ ந்தமாக நிலம் வாங்கி அதில் வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுவோர், அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, சின்ன சின்ன விஷயங்களையும் அலட்சியப்படுத்தாமல் உரிய முக்கியத்துவம் கொடுப்பதால் மட்டுமே பாதுகாப்பான வீட்டை கட்ட முடியும்.
இதில் எந்த வகை கட்டடமானாலும் அதற்கான அஸ்திவாரம் எப்படி அமைய வேண்டும் என்பதை மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டும். குறிப்பாக சில பகுதிகளில் நிலத்தின் ஒட்டுமொத்த அமைப்பு அடிப்படையில் பொறியாளர்கள் முன்முடிவு எடுத்துவிடுகின்றனர்.
நிலத்தின் உறுதி தன்மை குறைவு என்ற அடிப்படையில் அதிக ஆழத்துக்கு அஸ்திவாரம் அமைக்க வேண்டும் என்று ஒரு கட்டடத்துக்கு முடிவு செய்யப்பட்டு இருக்கலாம். இதன் அடிப்படையில் அந்த பகுதியில் அனைத்து கட்டடங் களுக்கும் பொறியாளர்கள் பரிந்துரை வழங்கிவிடுகின்றனர்.
இதனால், சாதாரண வீடு கட்டுவோரும் அதிக செலவில் அஸ்திவாரம் அமைக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால், ஒவ்வொரு நிலத்துக்கம் தனித்தனியாக மண் பரிசோதனை செய்து இருந்தால் பிற பகுதிகளுக்கு அதிக ஆழத்துக்கு அஸ்திவாரம் அமைக்க வேண்டிய தேவை இல்லை என்பது தெரியவரும்.
எனவே, ஒவ்வொரு கட்டடத்துக்கும் தனித்தனியாக மண் பரிசோதனை செய்யும் போது மண் அடுக்குகளின் வேறுபாடு குறித்த விபரங்கள் துல்லியமாக தெரிய வரும். இதனால், தேவையில்லாத இடத்தில் அஸ்திவார பணிகளுக்காக அதிக செலவு செய்வதை தவிர்க்கலாம்.
அக்கம் பக்கத்து நிலத்தில் எடுக்கப்பட்ட மண் பரிசோதனை அடிப்படையில் உங்கள் கட்டடத்துக்கான அஸ்திவாரம் அமைப்பது நல்லதல்ல. இதனால், உங்கள் நிலத்தில் உண்மையிலேயே மண் அடுக்கில் பாதிப்பு இருந்தால் அது கவனத்துக்கு வராமல் போய்விட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், புதிதாக மனை வாங்கி வீடு கட்டும் போது மண் பரிசோதனை விஷயத்தில் அலட்சியம் காட்டினால் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். மண் பரிசோதனையை கூடுதல் செலவு என்று சிலர் தவிர்ப்பதை பரவலாக பார்க்க முடிகிறது.
இது விஷயத்தில் கட்டடத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறிய கட்டடங்களுக்கும் முறையாக மண் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். இதில், நிலத்தின் மேலோட்டமான தன்மையை கருத்தில் வைத்து அலட்சியமாக செயல்பட கூடாது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.