/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கான்கிரீட் துாண்கள் கட்டுமானத்தில் ஏற்படும் குறைபாடுகள் என்ன?
/
கான்கிரீட் துாண்கள் கட்டுமானத்தில் ஏற்படும் குறைபாடுகள் என்ன?
கான்கிரீட் துாண்கள் கட்டுமானத்தில் ஏற்படும் குறைபாடுகள் என்ன?
கான்கிரீட் துாண்கள் கட்டுமானத்தில் ஏற்படும் குறைபாடுகள் என்ன?
ADDED : செப் 13, 2025 07:29 AM

நா ம் கட்டும் புதிய கட்டடம் உறுதியாக இருக்க வேண்டும், தலைமுறைகள் கடந்து நிலைத்து நிற்க வேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்க்கிறோம். ஆனால், இதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்வதிலும், அதை முறையாக கடைப் பிடிப்பதிலும் தான் பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகின்றன.
இன்றைய சூழலில், தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு என எதுவானாலும், கட்டுமான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைத்துவிட்டு உரிமையாளர்கள் அமைதியாகிவிடுகின்றனர். அனைத்தையும் ஒப்பந்ததாரர் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையே இதற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக, எதார்த்த நிலையில் பார்த்தால், பெரும்பாலான மக்கள் வெவ்வேறு விதமான படிப்புகளை முடித்து தங்களுக்கான வேலையில் ஈடுபட்டு இருக்கின்றனர். இவர்கள் வாழ்க்கையில் ஒரு முறை தான் வீட்டுக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் பெரும்பாலான மக்களுக்கு அடிப்படையில் கட்டுமான பணிகள் எப்படி மேற்கொள்ளப்படுகிறது, அதில் எது முக்கியம், எது தவறு என்பதில் சரியான புரிதல் இருப்பதில்லை. இதற்காக, வீடு கட்டும் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் பொறியாளராக இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது.
இந்நிலையில், வீடு கட்டுவதற்கான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் ஒருவரிடம் ஒப்படைத்தாலும், அதில் ஒவ்வொரு நிலையிலும் தொழில்முறையில் யார் ஈடுபடுத்தப்படுகிறார் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, கட்டுமான பணிக் குளறுபடி இன்றி நடக்க வேண்டும்.
தற்போதைய சூழலில், சில இடங்களில் கட்டடங்கள் குறுகிய காலத்தில் இடிந்து விழுந்து விபத்துகள் ஏற்படுவதை பார்த்து இருப்போம். ஒரு கட்டடம் பயன்பாட்டு நிலையில் இடிந்து விழுகிறது என்றால் அதற்கு குறிப்பிட்ட சில விஷயங்கள் மட்டுமே காரணமாக இருக்கும்.
கட்டடத்தின் மேல் பாகத்தில் ஏற்படும் சுமையை பரவாலாக்கி, பல்வேறு வழிகளில் நிலத்தில் கொண்டு சேர்ப்பது துாண்கள் தான். இதில், நீங்கள் பயன்படுத்தும் கம்பிகள் மிகுந்த தரமானதாக இருக்க வேண்டியது அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
துாண்களில் பயன்படுத்தப்படும் கம்பிகள், கான்கிரீட் ஆகியவற்றில் தரம் குறையும் நிலையில் துாண்கள் நிலை குலைந்துவிடும். குறிப்பாக, மேலிருந்து அதிக சுமை ஒரு துாணில் இறங்கும் போது அதில் கம்பிகள் வளையும் போது உறுதி தன்மை பாதிக்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, மேல் பாகத்தில் அதிக அழுத்தம் நிலத்தில் இறங்கும் முன், துாணின் ஏதாவது ஒரு பகுதியில் கான்கிரீட் உட்புறமாக உடைந்து நொறுங்கும் போது உறுதி தன்மை பாதிக்கப்படும். இது மட்டுமல்லாது, கட்டடத்தின் மேல் பகுதியில் செயற்கையாக திடீரென சுமை அதிகரிக்கும் நிலையில், துாண்கள் குறுக்காக உடையும் நிலையும் ஏற்படக்கூடும்.
இது போன்ற பாதிப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.