
கடந்த மே மாதம் தனியார் அமைப்பு நடத்திய மாநில பளு துாக்குதல் போட்டி யில், 50 கிலோ பிரி வில் ஐந்தாம் இடம் பிடித்த 82 வயது கிட்டம்மாள் பாட்டிக்கு அதுதான் முதல் போட்டிக்களம்.
பளு துாக்க வைக்கிறது உடம்பா, மனசா பாட்டி?
சின்ன வயசுல இருந்தே மரம் ஏறுறது, களையெடுக்கிறது, பால் கறக்கிறது, நீச்சல்னு பரபரப்பா இருப்பேன்; இப்பவும் வீட்டுக்கு நான்தான் பெயின்ட் அடிக்கிறேன்; சிலிண்டர், அரிசி மூட்டையை துாக்குறேன்; என் மனசு சும்மா இருக்கவிடாது!
கணவர் வெங்கட்ராமனுடன் பொள்ளாச்சியில் வசிக்கும் கிட்டம்மாள் பாட்டிக்கு ஏழு உடன்பிறப்புகள்; மூன்று பிள்ளைகள்; ஆறு பேரன் பேத்திகள்; நான்கு கொள்ளு பேரன் பேத்திகள்!
பாட்டிக்கு மறக்க முடியாத நாட்கள்?
அப்போ பெரிய பஞ்சம். ஒரு கிலோ குருணை அரிசியில குழந்தைகளுக்கு கஞ்சி காய்ச்சிட்டு, நானும் அவரும் தொடர்ந்து 15 நாள் பட்டினியா கிடந்தோம். அப்போ, ஆஞ்சநேயரை மனசார வேண்டிக்கிட்டேன். இன்னைக்கும் கோட்டூர் மலையாண்டிபட்டினம் ஆஞ்சநேயரை நினைச்சுக்கிட்டு தான் காலையில அடுப்பு பற்ற வைப்பேன்.
ஒவ்வொரு மாதமும் அன்னதானம் வழங்கும் கிட்டம்மாள் பாட்டி, அரசிடம் வைக்கும் ஒரே கோரிக்கை...
'சின்னவயசு பசங்க எல்லாம் குடிக்கு அடிமையாகி நோயில கிடக்குதுங்க; அந்த 'டாஸ்மாக்'கை மூடிருங்களேன்!'