/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... நாதஸ்வரமும் இசைத்து பாருங்களேன்
/
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... நாதஸ்வரமும் இசைத்து பாருங்களேன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... நாதஸ்வரமும் இசைத்து பாருங்களேன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... நாதஸ்வரமும் இசைத்து பாருங்களேன்
ADDED : ஜூன் 29, 2025 12:12 AM

மதம், இனம், மொழி, மாநிலம், நாடு என்ற பாகுபாடு, வேறுபாடுகளையெல்லாம் கடந்தது தான் இசை. செய்யும் தொழிலிலும் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் தாக்கம் இசைக்கு உண்டு. அந்த அடிப்படையில், அனுப்பர்பாளையத்தில் மர வேலைப்பாடுகள், மர சிற்பம் தயாரித்து விற்கும் தொழிலில், கடந்த, 25 ஆண்டாக ஈடுபட்டு வரும் ஆனந்தன் என்பவர், முதல் முயற்சியாக மூங்கிலில் நாதஸ்வரம் தயாரித்து, அதில் இசை மீட்கும் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார்.
ஆர்வமாய் பேசத் துவங்கினார் ஆனந்தன்...
''கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் பளியர் என்ற பழங்குடியின மக்கள், 'பெருங்குழல்' என்ற இசைக்கருவியை வாசிக்கின்றனர். ஒரு அடி நீளம் மட்டுமே உடையது. ஸ்வரம் மீட்க ஆறு துளைகளை கொண்ட அதன் முகப்பில் தேங்காய் சிரட்டை வைத்துள்ளனர். பறக்கும் கழுகுகளின் உதிரும் இறகின் மையப்பகுதியில் உள்ள நரம்பு போன்ற பகுதியையும், இசைக்கருவி தயாரிப்புக்கு பயன்படுத்தியுள்ளனர்.
''தற்போது அந்த இசைக்கருவியை ஒரு முதியவர் மட்டுமே வாசித்து வருகிறார்; 20 இளைஞர்களுக்கு அவர் வாயிலாக பயிற்சி வழங்கி, அவர்களின் பாரம்பரிய இசையை மீட்டெடுக்கும் முயற்சியில், செம்மொழி தமிழாய்வு மையம் ஈடுபட்டுள்ளது; அந்த இசைக்கருவியின் முகப்பு பகுதியை வடிவமைத்து தர வேண்டும் என பழங்குடியினர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வரும் பழனிவேல்ராஜன் கூறினார். நானும், முகப்பு வேலைப்பாடை செய்து கொடுத்தேன்.
அந்த பெருங்குழலில் இருந்து எழும்பிய இசை, 1,000 தேன் பூச்சிகள் ஒரு சேர எழுப்பும் ஒலியின் பிரமிப்பை கொடுத்ததால், அந்த இசைக்கருவி, எனக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படுத்தியது. குழல் என்றால் மூங்கில் என்பது பொருள் என்பதால், பல நுாறு ஆண்டுகளுக்கு முன், மூங்கில் உதவியால் தான் அந்த இசைக்கருவி செய்திருக்க முடியும் என அனுமானித்து, முதல் முயற்சியாக, மூங்கிலை வைத்து நாதஸ்வரம் தயாரித்தேன்.
கழுகு இறகு கிடைக்கும் வாய்ப்பு இல்லாததால், அதற்கு பதிலாக, பித்தளையை சுருட்டி பயன்படுத்தினேன். ஸ்வரம் எழுப்ப ஆறு மற்றும் ஏழு துளைகளுடன் நேர்த்தியாக செய்து முடிக்க முடிந்தது. எனக்கு தெரிந்த நாதஸ்வர வித்வான் உதவிடன் அதில் இருந்து இசை மீட்க செய்தேன்; ரம்மியமாக வெளிவந்தது இசை. என் முயற்சிக்கு கிடைத்த பலன், ஆத்ம திருப்தியை அளித்தது.