/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
தன்னார்வ தொண்டிற்காக அமெரிக்க வெள்ளை மாளிகையில் விருது பெற்ற தமிழ் பெண்மணி!
/
தன்னார்வ தொண்டிற்காக அமெரிக்க வெள்ளை மாளிகையில் விருது பெற்ற தமிழ் பெண்மணி!
தன்னார்வ தொண்டிற்காக அமெரிக்க வெள்ளை மாளிகையில் விருது பெற்ற தமிழ் பெண்மணி!
தன்னார்வ தொண்டிற்காக அமெரிக்க வெள்ளை மாளிகையில் விருது பெற்ற தமிழ் பெண்மணி!
ஜன 20, 2025

பத்மா அர்விந்த் மருத்துவத்துறையில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய, மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகவும் உடல்நலத்துறையின் சிறப்பு ஆலோசகராகவும் 20 வருடங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறார்.
நியுஜெர்சியில் உள்ள பல இலாபம் எதிர்நோக்கா நிறுவனங்களில் பொதுநலப் பணிகளை தன்னார்வத்துடன் செய்து வருகிறார். வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழிற்கல்வி தரும் நோக்கோடு இலாப நோக்கில்லா நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்து, நடத்தி வருகிறார்.
திசைகள், தமிழோவியம் போன்ற இணைய இதழ்களும், ஊடறு, போன்ற பதிப்பு பத்திரிக்கைகளும் இவருடைய கட்டுரைகளைத் பிரசுரித்திருகின்றன. மெட்ராஸ் பேப்பர் என்ற இணைய இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறும் வழிகள் குறித்து இவர் எழுதிய க்ரீன் கார்ட், அமெரிக்க அரசியல் குறித்து எழுதிய உள்ளும் புறமும், திட்டமிடுதல் பற்றிய திட்டமிட்ட வெற்றி என்ற புத்தகங்கள் சீரோ டிகிரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன.
திட்டமிட்ட வெற்றி, உள்ளும் புறமும் சீரோ டிகிரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. இதைத்தவிர, அகம், தண்ணீர், பருவம், இரவு ஆகிய கட்டுரைத்தொகுப்புகளில் இவருடைய கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத்தில் வெளியான சிறுகதைத் தொகுப்பான Dancing Gold Flakes இல் இவருடைய இரண்டு சிறுகதைகளும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. கனவுகள் மின்னும் தேசம் என்னும் புத்தகம் ஹர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட, தொழில் கல்வியில் பல தரப்பட்ட பயிற்சி அளிக்க அரசின் மூலம் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். போதைப் பழக்கம் காரணமாக தவிக்கும் குழந்தைகள், பதின்ம வயதினர் படிக்க, நல்லபழக்கங்கள் மேற்கொள்ள பல புதிய திட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறார்.
பள்ளிக் குழந்தைகள் போதைப் பழக்கத்தில் இருந்து மீளவும், மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகளை அதிகமாக பயன்படுத்தாமல் இருக்கவும் ஆலோசனை சொல்லும் வகுப்புகளை ஏற்படுத்தினார்.
ஆரம்ப காலத்தில் டெக்ஸாஸ் ஆண்டர்சன் புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம், நியுயார்க் ஸ்டார்க் கான்சர் ஆய்வு மையம் கார்னெல் மருத்துவக் கல்லூரியில் புற்றுநோயில் ஆராய்ச்சி செய்தவர், பிறகு பொதுநலத்துறையில் பணி செய்யத் தொடங்கினார்.
நியுஜெர்சியில் பல பொதுநல மருத்துவ முகாம்கள், குறிப்பாக இந்தியர்களுக்கும் விளிம்பு நிலை அமெரிக்கர்களுக்குமானது, போதைப் பொருட்களின் அடிமைத்தனத்தில் இருந்து மக்களை மீட்பது, வன்முறையில் இருந்து வெளியேற வழி காட்டுவது என பணிகளை மேற்கொண்டார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தொழிற்துறை பயிற்சிகள் அளிக்க அரசிடம் இருந்து நிதி பெற்று அவற்றை நிறைவேற்றி பெண்களுக்கு ஒரு பாதை ஏற்படுத்தி கொடுப்பதும் இவரது பணியாகும்.
தற்போது அமெரிக்க அரசின் இண்டர்மீடியரியாகவும் உடல்நல senior subject matter expert ஆகவும் பணிபுரிகிறார். அதிபர் ஒபாமா, டிரம்ப்பிற்கு பிறகு அதிபர் பைடன் ஆட்சியில் அப்ரென்டிசிஷிப் திட்டம் விரிவுபடுத்த தலைவராகவும், அம்பாசிடராகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமீபத்தில் சிறந்த அப்ரென்டிஷிப் அம்பாசிடராக செயல்பட்டதாக வெள்ளைமாளிகையால் சிறப்பிக்கப்பட்டார்.
இவரது திட்டங்களால் பல வேலைவாய்ப்புக்கான புது படிப்புமுறைகள் உருவாகின. 300க்கும் அதிகமான வீடிலிகளை பயிற்றுவித்து பணியில் அமர்த்தி அவர்களுக்கான வாழ்க்கைப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
பணியில் இருக்கும் போதே அந்த பயிற்சிக்காக கல்லூரி க்ரெடிட் பெறவும் அவற்றின் மூலம் பட்டம் பெறவும் வழிவகை செய்திருக்கிறார்.
-வர்ஜினியாவிளிருந்து அபர்ணா ஆனந்த் with NCM