
கிறிஸ்துமஸ் விடுமுறையை ஹவாயில் கொண்டாட மகளும் மருமகனும் ஏற்பாடு செய்திருந்தார்கள். பசிபிக் பெருங்கடலில் எட்டு பெரிய தீவுகளையும் குட்டிக் குட்டியாய் ஏகப்பட்ட தீவுகளையும் உள்ளடக்கியது தான் ஹவாய்த் தீவுகள். இது ஐக்கிய அமெரிக்காவின் ஒரு மாநிலம். அமெரிக்கக் கண்டத்திலிருந்து ஏறத்தாழ 3000 கி.மீ.தொலைவில் பசிபிக் பெருங்கடலில் உள்ளது.
கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாந்து விமான நிலையத்திலிருந்து ஹானலூலுவுக்கு நாலரை மணி நேர விமான பயணம். உள்நாட்டு விமானத்தில் செழிப்பான பாட்டிகள் தான் விமானப் பணிப்பெண்கள். தில்லானா மோகனாம்பாள் பாலையா சொல்வது போல் விமானம் கிளம்பி வெகுநேரம் வரை ஆட்டம் அதிகமாயிருந்ததால் இரண்டரை மணி நேரத்துக்குத் தண்ணீா்கூடக் கொடுக்கவில்லை.
சுளீரென்று வெயில்
ஹவாயின் தலைநகரம் ஹானலூலுவில் இறங்கியதும் சென்னையில் இறங்கிய உணர்வு. பூமத்திய ரேகைக்கு வடக்கே ஏறத்தாழ 1500 மைல் தொலைவில் இருப்பதால் இங்கே அமெரிக்காவின் குளிர் கொஞ்சம்கூட இல்லை. நம் ஊர் மாதிரிச் சுளீரென்று வெயில் அடிக்கிறது. நாங்கள் வைக்கிகி (Waikiki) என்னுமிடத்தில் ஹில்டன் என்னும் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினோம்.
விடுதியின் உள்ளே நுழைந்ததுமே கிறிஸ்துமஸ் அலங்காரம் கண்ணைப் பறித்தது. எங்கு பார்த்தாலும் கிறிஸ்துமஸ் தாத்தா welcome சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் தங்கியிருந்த இருபத்தேழாவது மாடியிலிருந்து பார்த்தால் ஒரு பக்கம் அடர்நீலமும், கரும்பச்சையும், நுரைக்கும் வெண்மையுமாய்க் கண்கொள்ளாக் காட்சியளித்தது பசிபிக் பெருங்கடல். அதில் வெள்ளையும், மஞ்சளும், சிவப்புமாய்ச் சுற்றிச் சுற்றி வரும் படகுகளும் அவற்றுக்கு மேல் பறக்கும் பாராசூட்டுகளும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத காட்சி. இந்தப் பக்கம் திரும்பினால் பச்சைப் போர்வை போர்த்திக் கொண்ட மடிப்பு மடிப்பான மலைகள் என்னைப் பாரேன் என்று அழைத்தது.
ஆன்நதக் குளியல்
காலை வெயிலில் கடலில் ஒரு ஆட்டம் போடலாம் என்று போனால் வெண்மணலில் வெள்ளைப் புறாக்கள். ஒரு கைக்குட்டை அளவு மேல்துணியும், அரை கைக்குட்டையளவு கீழ்த்துணியும் அணிந்துகொண்டு மல்லாக்கவும், குப்புறவும் படுத்துக் கொண்டிருந்த பளீர்ப் பெண்கள். இந்த ஊருக்குன்னே ஸ்பெஷலா டிரஸ் தைப்பாங்க போல. நம்ம ஊருப் பொண்ணுங்க கூட இங்க திறந்த முதுகோட காத்தாடச் சுத்தறாங்க. கொஞ்சம் நீச்சல் தெரியும் என்பதால் வெகுதூரம் வரை ஆழமில்லாத கடலில் ஆனந்தமாகக் குளித்தோம்.
அன்று மாலை ஆரஞ்சு வண்ண சூரியப் பந்து கடலுக்குள் முத்தெடுக்க அவசரமாய் சர்ரென்று இறங்குவதை பார்த்துவிட்டு கடற்கரைச் சாலையில் காலாற நடந்தோம். மெரீனாக் கடற்கரையை நினைவுபடுத்துவது போல் ஆங்காங்கே தலைவர்களின் சிலைகள். இங்குள்ள பறவைகளுக்குக் கூட இச்சிலைகளின் அருமை தெரியுமோ? அவையேதும் சிலைகளின் தலையில் காலைக்கடன் கழிக்கவில்லை. புத்தம்புது பூமாலை அணிந்து கொண்டு பளபளப்பாகக் காட்சியளிக்கின்றன.
மகாத்மா சிலை
ஹவாய்த் தீவின் ஆளுமை மனிதர்களுக்கிடையே மகாத்மா காந்தி பளீரெனத் தெரிந்தார். 1990ல் அமைதியின் சின்னமாக இந்தச் சிலை நிர்மாணிக்கப் பட்டுள்ளது. ஆலமர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த மகாத்மாவும் புதிதாய் மாலைகள் அணிந்திருந்தார். எங்கு பார்த்தாலும் விழுதுகளுடன் பரந்து விரிந்திருக்கும் ஆலமரங்களும், பறவைகளின் கீச் கீச் கூச்சலும் நம் கிராமங்களை நினைவுபடுத்துகிறது. கடற்கரைச் சாலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. தெருவெங்கும் திருவிழாக் கோலம் தான். ஆட்டம்பாட்டங்களும், சாலையோரத்திலேயே யோகா செய்யும் பெண்களும், ஸ்டார்பக்ஸ் காபிக் கடைகளும், வெவ்வேறு நாட்டு உணவகங்களும், ஹவாய் ஆடையகங்களும் வரிசைகட்டி நிற்கின்றன. சன்னல் ஷாப்பிங் பண்ணினோம்.
ஹரே ராம ஹரே ராம
இதற்கிடையே திடீரென்று 'ஹரே ராம ஹரே ராம' பஜனைச் சத்தம் காதில் விழுந்தது. ஐந்தாறு இஸ்கான் குழுவைச் சேர்ந்த அமெரிக்கர்கள் குங்குமப் பொட்டுடன் ஜால்ராவும், மிருதங்கமும் வைத்துக் கொண்டு பாடிக்கொண்டிருந்தார்கள். இதுவும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமோ! எல்லா நாட்டைச் சேர்ந்தவர்களும் சுற்றுலாவுக்காக இங்கே வந்து குவிகிறார்கள். பிலிப்பைன்ஸ், ஜப்பான், சீன நாட்டவர்கள் நம்மைப் போலவே குடும்பத்தோடு சுற்றுலா வராங்க. இங்கே நாலைந்து இந்திய உணவகங்கள் இருக்கின்றன.
இரண்டாவது நாள் அடித்தளத்தில் கண்ணாடி பொருத்திய படகில் பயணித்தோம். பயணிக்கும்போது ஒரு பக்கம் வானுயர்ந்த கட்டிடங்களும், மறுபக்கம் நான்தான் பெரியவன் என்று கம்பீரம் காட்டும் பசேல் மலைகளுமாக அற்புதக் காட்சி. நம் அந்தமான் மாதிரி இருந்தது. அந்தமானில் இதுபோன்ற நெடிதுயர்ந்த கட்டிடங்கள் கிடையாது. படகை ஓட்டிய பெரியவர் சிரித்த முகத்துடன் ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார். அவருடைய உதவியாளர் பச்சை குத்திய இரண்டு தாராளப் பெண்களுடன் கடலை போட்டுக் கொண்டே வந்தார்.
கடலின் ஆழத்தில் செல்லும்போது உதவியாளர் போட்ட உணவுக்காக விதவிதமான, வண்ண வண்ண மீன்கள், கூட்டம் கூட்டமாகத் துள்ளித் துள்ளி வந்தன. ஐம்பதடி தூரத்தில் ஏழெட்டு டால்பின்கள் டைவ் பண்ணிக்கொண்டே எங்களோடு சேர்ந்து பயணித்தன. ஒரு மணி நேரம் ரம்மியமான, மறக்க முடியாத கடல் பயணம்.
ஹலோனா என்ற இடத்தில் பாறையிலிருந்த சிறுதுளை வழியே கடல் நீர் புகுந்து தீபாவளி புஸ்வானம் மாதிரி சரேலென்று பனையளவு பொங்கி விழுகிறது. இதற்கருகே இரண்டு மலைகளுக்கு நடுவே அரைவட்டச் சுனைபோல் கடல்நீர் அற்புதமாய்க் காட்சியளிக்கிறது. இரண்டு கடல் ஆமைகள் நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தன. Halona blow hole Lookout என்று Google ல் தேடிப்பாருங்கள்.
பொட்டானிகல் கார்டன்
மறுநாள் காலை Ho'omaluhia பொட்டானிக்கல் கார்டன் சென்றோம். வித விதமான வடிவங்களில் வண்ண வண்ண மலர்களும் சிவந்த மூங்கில்களும் அழகான நீர்த்தேக்கமும் அதில் துள்ளி விளையாடும் வண்ண வண்ண மீன்களும் அற்புதம். மலைகள் சூழ்ந்த அந்த இடத்தில் ஒரு காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பெரும் சேதம் விளைந்ததாம். அதில் இரண்டு பேர் உயிரிழந்து விட்டார்களாம். அதனால் மழைநீர் வடியும் வகையில் ஒரு அணை கட்டி வெள்ளத்தால் சேதம் ஏற்படாதவாறு காபந்து செய்திருக்கிறார்கள். நம் ஊரில் மழைத் தண்ணீர் வடியும் இடங்களில் எல்லாம் வீடுகளைக் கட்டி, ஏரிகளில் பிளாட் போட்டு விற்று, வீட்டுக்குள் மழைநீரை புகவிட்டு வேடிக்கை பார்க்கிறோம். எந்தச் சேதத்தையும் நிவாரணம் கொடுத்து அமுக்கி விடுகிறோம்.
கலாச்சார மையம்
அடுத்து Polynesian Cultural Center க்குப் போனோம். அங்கே ஹவாய்ப் பழங்குடியினர் போல் தோற்றமளிக்கும் நபர்கள் ஆங்காங்கே தென்படுகின்றனர். பல்வேறு ஷோக்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு ஷோவில் போய் உட்கார்ந்தால் அவர் உடம்பெல்லாம் பச்சை குத்திக் கொண்டு பழங்குடியினர் தோற்றத்தில் ஒருவர் வித்தை காட்டிக் கொண்டிருந்தார். ஒரு முழுத் தேங்காயை ஒரே அடியில் தொலித்து அதைச் சரிபாதியாக உடைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யுவதிகளிடம் ஆளுக்கொரு தேங்காய் மூடியைக் கொடுத்து அந்தத் தண்ணீரை ருசிபார்க்கச் சொன்னார். அந்தப் பெண்கள் கண்களை விரித்து “delicious” என்று சொன்னார்கள். வெளியே இருந்த தென்னை மரங்களில் கடகடவென ஏறி இரண்டு பேர் வித்தை காட்டினார்கள். அங்கே உடைத்த தேங்காய் விற்பனை அமோகமாய் நடந்து கொண்டிருந்தது.
டாட்டூ வரைவது, மீன் பிடிப்பது, கயிறு சுற்றுவது என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன. ஒரு நாள் பூராச் சுற்றிப் பார்க்கலாம். பூங்காவுக்கு நடுவே சின்னப் படகு சவாரி. எங்கு பார்த்தாலும் “அலோஹா” என்று சொல்கிறார்கள். 'ஹாய்!' என்று அர்த்தமாம். படகை ஓட்டிய இந்திய மாணவன் “நாங்கள் எல்லாம் விடுமுறையில் இந்த வேலை பார்க்கிறோம். டிப்ஸ் கொடுப்பவர்கள் கொடுக்கலாம்!” என்று சொன்னான். நாங்கள் தாராளமாக டிப்ஸ் கொடுத்து நாட்டுப் பற்றை நிரூபித்தோம்.
பிரம்மாண்ட ஷோ
அடுத்து ஒரு பிரம்மாண்ட அரங்கில் ஹவாய் பழங்குடியினர் வாழ்க்கை பற்றிய பிரம்மாண்டமான ஷோ(Ha, Breath of life) ஒன்று நடந்தது. அதில் கூட்டத் தலைவனுக்குத் திருமணம் நடப்பதில் ஆரம்பித்து அவர்கள் ஆட்டமும் கொண்டாட்டமும் அதற்கேற்ப இசையும் அற்புதமாக இருந்தது. தலைவி கர்ப்பம் தரித்ததும் அவளை உட்கார வைத்து ஆண்களும் பெண்களும் ஆடும் நடனமும், அவளுக்குக் குழந்தை பிறந்ததும் அத்தனை பேரின் உற்சாகத்தையும் ஆட்டத்திலேயே காட்டும் அழகும் தீப்பந்தங்களைச் சுழற்றிச் சுழற்றி ஆடும் லாவகமும் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.
அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி அவன் ஒரு பெண்ணைக் காதலித்து அவன் கல்யாணம் செய்வது வரை அவர்கள் வாழ்வியலை அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்கள். உண்மையிலேயே அந்த ஒரு மணி நேரம் வேறொரு உலகத்தில் இருந்தோம். காடும் மலையும் அருவியும் கண் முன்னே அற்புதமாக விரிந்தன. படிகளில் கண்ணிமைப்பதற்குள் ஏறி, இறங்கி, ஆடிப்பாடி, தாவிக்குதித்து, காதல் செய்து, ரௌத்ரம் கொண்டு, கண்ணீர் சிந்தி என நம்மை இமைக்கக்கூட மறக்கச் செய்யும் அளவுக்கு அவர்கள் பரபரவெனச் செயல்பட்டதற்குப் பின்னாலிருந்த அவர்களின் அசுர உழைப்பு புரிந்தது. ஷோ முடிந்ததும் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
தமிழ்க் குரல்
வெளியில் வரும்போது “ஷோ பிடிச்சுதா?” என்ற தமிழ் குரல் கேட்டுத் திகைத்தோம். அந்த இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த இளைஞன் அங்கேயுள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவனாம். அவனுடன் 60 இந்திய மாணவர்கள் அந்தக் கல்லூரியில் படிக்கிறார்களாம். அவர்களெல்லாம் பார்ட் டைமாக இங்கே வேலை பார்க்கிறார்களாம். இந்தப் பையனும் ஷோவில் முக்கிய கதாபாத்திரமாக ஆகும் லட்சியத்தில் உடல் எடையைக் கூட்டிக் கொண்டிருக்கிறானாம். நம் இளைஞர்கள் எங்கும் சாதித்துக் காட்டுவார்கள் போல. அவனை மனதார வாழ்த்திவிட்டு வந்தோம்.
அடுத்த நாள் Valley of the Temples Memorial Park போனோம். போகும் வழியெல்லாம் “புல்வெளி புல்வெளி” எனப் பாடத் தோன்றும் அளவுக்கு பல ஏக்கர் பரப்புக்கு புல்வெளி பரந்து விரிந்து கிடந்தது. அந்தப் புல்வெளியின் மேட்டில் வெள்ளை வெளேரென்று ஒரு சர்ச். புல்வெளி முடியுமிடத்தில் ஒரு அழகான புத்தர் கோவில். புத்தரை தரிசித்துவிட்டு Kualoa Ranch என்ற இடத்துக்குச் சென்றோம்.
அங்கே நமது மிலிட்டரி வேன் போன்ற ஒரு ஜீப் தயாராக நின்றது.நாங்கள் சென்ற மலைத் தொடரின் பெயர் Ko'olau Range. காடு, மேடெல்லாம் அநாயசமாக ஓட்டிச் சென்றது ஒரு பெண். அங்கே நம் ஊர் அய்யனார் மாதிரி ஒரு காவல் தெய்வத்தைக் காட்டினார். அவர்களுக்கும் நம்மைப் போலவே நான்கு முக்கிய தெய்வங்களும் நாலாயிரம் சிறு தெய்வங்களும் இருக்காங்களாம். ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு மேலே ஏறிப் North Valley View Point ஐப் பார்க்கச் சொன்னார். ஒரு பக்கம் பசுமைப் பள்ளத்தாக்கு, மறுபுறம் நீலக்கடல், எதிர் திசையில் மலை என திரைப்படங்களில் பார்ப்பது போல் ரம்மியமாய் இருந்தது.
The Jurassic World
The Jurassic World திரைப்படம் எடுத்த பகுதியைப் பார்த்தோம். அதற்கென்றே ஒரு பெரிய சுவரும், பெரிய கேட்டும் எழுப்பியிருக்கிறார்கள். அந்த இடத்தைப் பார்த்ததும் என் பேரன்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். திரைப்படக் காட்சிகளையும், அவை காட்சிப்படுத்தப்பட்ட இடங்கள் ஒவ்வொன்றையும் அந்தப்பெண் விளக்கினார். ஒரு மலை முழுக்க மாமரங்கள் வளர்ந்திருந்தன.
மொத்தத்தில் ஹவாய்ப் பயணம் என் வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு இனிமையாக அமைந்தது. தினம் தினம் காலையில் கடற்கரையில் ஸ்டார்பக்ஸ் காபியைக் கையில் ஏந்தி நடக்கும் அனுபவமும், மாலையில் ஐஸ்கிரீமோ, இங்கே பிரத்தியேகமாகக் கிடைக்கும் கோகனட் ஜூஸ்(நம்ம இளநீர்ப் பாயசம் மாதிரி நல்லா இருக்கு) அல்லது எடுத்துப் போன நொறுக்ஸ் என ஏதாவது ஒன்றை லபக்கிக் கொண்டே சூரிய அஸ்தமனத்தை ரசித்தது ஒரு அழகான அனுபவம்.
வயதான பெண்கள் கூட வாடகைக் கார் ஓட்டுகிறார்கள். இவர்களிடமிருந்து சுறுசுறுப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும். கிளம்புவதற்கு முன் மகாத்மாவைப் பார்த்து bye சொல்லிவிட்டு வந்தோம். முக்கியமாகப் பார்க்க வேண்டிய Pearl Harbour ஐப் பார்க்க முடியவில்லை. 'அடுத்த முறை கண்டிப்பாக வாருங்கள்!' என்று ஒரு வியட்நாம் ஓட்டுநர் சொன்னார். ஹானலூலு விமான நிலையம். வயதான விமான பணிப்பெண்களின் வரவேற்பு. இந்த முறை ஆட்டம் அதிகமில்லாததால் ஏறிய உடனே தண்ணீரும், ஜூஸும் வந்தது. அமெரிக்கா, ஆஸ்திரிலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து ஹவாய் ஓரளவு அருகில் இருப்பதால் இந்த நாடுகளுக்குப் போனால் உங்கள் பயணத் திட்டத்தில் ஹவாயும் இருக்கட்டும்.
- தினமலர் வாசகி வசந்தா கோவிந்தராஜன்