
“இமயம்தொடும் அளவிலான கனவுகள், அதற்கான சிந்தனைகள், இலட்சியங்கள், மனம் தளராமல் அவற்றை அடைய எடுக்கும் முயற்சிகள், கடும் உழைப்பு, எடுத்த காரியம் வசப்படாத போதுவிடாமல் அடுத்தடுத்து தேடல் போன்றவை எல்லாம் என்னை உயர்த்திப் பிடித்து இருக்கின்றன.” என்று பெருமைப்படுகிறார்- ப்ரீதிராஜீவன்..
இவர் அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத் தலைநகரான ஆஸ்டனில் பிரபல BASIS பள்ளியின் பிரின்ஸ்பால், வழக்கமான பெண்கள் போல குறிப்பிட்ட வட்டத்திற்குள் உழன்றுக் கொண்டிருக்காமல், உயர்நோக்கங்கள் கொண்டு சோதனைகளைச் சாதனைகளாக்க வேண்டும் என்பதில் இவர் தீவிரவாதி.
பிரீத்தியின் தாய் சைலஜாவின் பூர்வீகம் கேரளத்தில் கண்ணூர். ஆனால் இவர் பிறந்தது சேலத்தில். வங்கியாளரான அப்பா ராஜீவன், சென்னைவாசி. பிரீத்தியின் படிப்பு செயின்ட் டோமினிக்- மற்றும் அண்ணா ஆதர்ஷ். பிறகு எம்.ஜி.ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் B.E-EC!
படிக்கும்போதே ப்ரீத்திக்கு அமெரிக்காவின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. அங்கு மேற்படிப்பு, அப்புறம் வேலை என்கிற கனவு! பெரிதாய் செயல்படுத்த வேண்டும் என்கிற தாக்கத்திற்கு ஊக்கம் தந்தவர் அப்பா.! அவரது வார்த்தைகள் மனதிற்கு உரமிட்டிருந்தது. “வழக்கமான குடும்பப்பெண் போல் அடங்கிவிட கூடாது! பெண்களுக்கு சக்தி அதிகம்; சாதிக்கணும், தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது; --பிரச்சனைகள் சிறியதோ, பெரியதோ எதிர் கொள்ளணும்! கடந்து போகணும்! இங்கே எதுவும் யாருக்கும் சாஸ்வதம் இல்லை.
ஒன்றில்லை என்றால் இன்னொன்று, அதுவும் இல்லை என்றால் மற்றொன்று!. தனித்துவத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படணும்” என்று அப்பா இவருக்கு கொடுத்திருந்த ஊக்கம் ப்ரீத்திக்கு உந்துசக்தியாக அமைந்தது .
இருந்தாலும் ப்ரீத்தி வேகமாக லட்சியங்களைத் திட்டமிடும்போது அவற்றை அதே வேகத்தில் சிதைக்கும்படியாக சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அப்படி இளம் பருவத்தில் முதல்அடியாக- தந்தையின் மரணத்தால் ப்ரீத்தியின் கனவு மட்டுமல்ல, குடும்பமே கலங்கிப் போயிற்று.
முயற்சியின் பலன்
அந்த நேரம் வங்கியில் வாரிசு அடிப்படையில், ப்ரீத்திக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் கல்லூரி படிப்பை நிறுத்துவதில் அவருக்கு விருப்பமில்லை. அத்துடன் அம்மாவிற்கு நிரந்தர வருமானம் இருக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக அம்மா சைலஜாவை டிகிரி படிக்க வைத்து அந்த வேலையில் சேர வைத்து அவரது வேலையிலும் ப்ரீத்தி உதவி செய்தார்.
படிப்பு முடிந்ததும் குடும்பம் பெங்களூரில் குடிபெயர்ந்தும் கூட அங்கு நிலைநிற்பிற்குப் பெரும்பாடு பட வேண்டியிருந்தது. அந்த தருணத்தில் கூட ப்ரீத்தியின் அமெரிக்கா கனவு நீர்த்துப் போகவில்லை; அங்கு போய் M.S படிக்கவேண்டும்என்கிற வேட்கை! இயல்பிலேயே பிரீத்தி பிடிவாதக்காரர். “திமிர் பிடித்தவள் யார் பேச்சும் கேட்கமாட்டாள்”என்கிற ஏச்சையும் பொருட்படுத்தாமல் கொண்ட நோக்கில் பயணிப்பது இவரதுபலம்.
அப்படிப்பட்ட பிடிவாதங்களில் ஒன்று திருமணத்திற்கு அமெரிக்காவில் பணிபுரியும் மாப்பிள்ளைதான் வேண்டும் என்பது. குடும்பப் பொருளாதார சூழலில் அமெரிக்கா சென்று படிப்பது கஷ்டம் என்பதால் திருமணம் மூலம் அதை சாதிக்கலாம் என்கிற கனவு! அப்படி உறவுகளின் எதிர்ப்பையும் மீறி மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்து அமைந்தவர்தான் மென்பொறியாளரான சந்திரமோகன்! திருமணத்தை ராஜாமுத்தையா அரங்கில் வைக்க வேண்டும் என்பதும் ப்ரீத்தி கனவாக இருந்தது.
திருமண திருப்பம்
2002ல் திருமணம் தொலைபேசியிலேயே (அன்று வீடியோகால் இல்லை) நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு விசா பிரச்சனையால் சந்திரமோகன் வர இயலாமல் எல்லாம் கேன்சல்!அந்த கனவு தகர்ந்தாலும் கூட ப்ரீத்தி தளரவில்லை. 2003 பிப்ரவரியில் மீண்டும் ஏற்பாடு. இம்முறை வடபழனி கோவிலில் நடத்தப்படும் திருமணத்திற்கு இடையில் இவர்களுடையதும் நடந்தேறியது. இன்ஜினியர்கள் தம்பதி இப்படி திருமணம் செய்து கொள்வது பற்றி ப்ரீத்தி மட்டுமல்ல சந்திரமோகனும் கூட கவலைப்படவில்லை.
“எப்போது பெரிதாய் சிந்திக்கலாம்; ஆனால் அமைவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிற கொள்கை உள்ளவர் சந்திரமோகன். திருமணத்திற்கு இரண்டுநாள் முன்புதான் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடிந்தது என்றாலும் கூட இருவரின் மனப்பொருத்தமும் அத்தனை ஐக்கியமாயிற்று. திருமணம் இப்படி என்றாலும்கூட பிரீத்தி விடாமல் தன் கனவான ராஜாமுத்தையா அரங்கிலேயே வரவேற்பு வைத்து சாதித்தார்.
அதே 2003 ல்அமெரிக்கா! ஆனால் அங்கு போனதும் இதுதான் அமெரிக்காவா இதற்காகவா ஆசைப்பட்டோம் என வெறுப்புத் தோன்றிற்று. ஏமாற்றம்! நிசப்தம்! தனிமை! மனதில் சூனியம்! தான் எதிர்பார்த்த அமெரிக்கா இதுவல்ல என புரிந்தது.
சந்திரமோகனும் அப்போது நிரந்தர வேலையில் இல்லை. பிரீத்தி அமெரிக்காவில் நுழையும் போதே அவருக்கு 20000 டாலர்கள் கடன் இருந்தது. அமெரிக்காவில் அந்த காலக்கட்ட பொருளாதார சரிவு-வேலை பிரச்சனை. குடும்ப ஏழ்மை - கஷ்டம் எல்லாமிருந்தும் கூட இருவரும் கலங்கவில்லை.
அந்த தருணத்திலும் சந்திரமோகன் தன் காரை அடமானம் வைத்து பணம் புரட்டி ப்ரீத்தியை M.S மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் படிக்க வைத்தார். படிக்கும் போதே மூத்த மகன் பிரணவ் பிறந்தான். அது ப்ரீத்தியின் படிப்புக்கு தடையாக இருக்கவில்லை.
ஆனால் விசா பிரச்சனையால் ப்ரீத்திக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்! சந்திரமோகன் நினைத்திருந்தால் எப்படியாவது யாரை பிடித்தாவது விசா சரி பண்ணி இருக்கமுடியும். ஆனால் கொள்கை கோட்பாடுடன் உள்ள அவர் அதற்கு முயற்சிக்கவில்லை. திறமை அடிப்படையில் வாய்ப்பு வரும்போது வரட்டும் என்று காத்திருந்து 2008 ல் நெதர்லாந்து கம்பெனியான ASML ல் வேலை--அதுவும் ஆரம்பத்தில் சம்பளம் இல்லாமல் இன்டென்ஷிப்!
சோதனைக்குப் பின் சாதனை
அந்த நேரம் ப்ரீதி இரண்டாம் முறை கர்ப்பமாகி பாத்ரூமில் விழுந்து அபார்ஷன் ஆகி ஆபத்தாக ஆம்புலன்ஸில் அழைத்து போகப்பட்டு பிழைத்தார். திரும்ப அடுத்த முறை கர்ப்பமானபோது ப்ரீத்திக்குள் ஒரு வைராக்கியம் எழுந்திருந்தது. அமெரிக்காவில் இருப்பதால் நம் கலாச்சாரம்- பழக்கவழக்கங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது -உற்றார் உறவினருடன் வளைகாப்பு நடத்த வேண்டும் என்று அவருக்கு ஆசை .
ஆனால் ஊருக்குச் சென்று எல்லாம் சிறப்பாய் முடிந்து திரும்பும் போது ரத்தக்கசிவு ஏற்பட்டு பதறி,. மருத்துவ பரிசோதனையில் அனுமதி பெற்று விமானத்தில் படாத பாடுபட்டு பரிதவிப்புடன் அமெரிக்காவில் இறங்கி உடனே மருத்துவமனை! பரிசோதித்த டாக்டர்கள் நிலைமையின் ஆபத்தை உணர்ந்து குழந்தையா அல்லது தாயா எது வேணும் என பயமுறுத்த,-- இம்முறை பெண் குழந்தை என்று முன்பே அறிந்திருந்தால் எந்த அசம்பாவிதமும் நேர்ந்து விடக்கூடாது என பிரார்த்தனை யுடன் மனதில் மட்டுமல்ல உடலிலும் உறுதியுடன் நீண்ட ரிஸ்க்கில் ஸ்பெஷல்வார்டில் அட்மிட்!
அங்கு சிகிச்சை பெற்று வந்த கேன்சர் பேஷண்ட்டுகளுடன் இவருக்கும் சிறப்பு அறை! சிகிச்சையில் குழப்பம் வரக்கூடாது, வைரஸ் புகுந்து விடக்கூடாது என்று எட்டு வாரங்கள் காற்று வெளிச்சம் படாத அறைக்குள் தீவிர சிகிச்சை! அப்போதும் கூட கஷ்டத்தை ஏற்று ப்ரீத்தி மனம் தளரவில்லை அதற்கு சந்திரமோகனும் பக்க பலமா இருந்தார்.
செலவுகள் இன்சூரன்ஸ் என்றாலும் வேலை பார்த்த கம்பெனி மேற்கொண்டு அதற்கு துணை இருக்க முடியாது என்று ப்ரீத்தியை வேலையை விட்டு நீக்கியது. அதற்கும் இருவரும் கலங்கவில்லை கடைசியாக ஆபரேஷன் மூலம் பெரும் போராட்டத்திற்கு பின் குழந்தை வெளியுலகம் கண்டது.
மருத்துவமனையில் இருந்து மறுபிறப்பு எடுத்து வீல்சேரில் வெளியே வந்து சுதந்திர காற்று மற்றும் வெளிச்சம் கண்ட பொழுது ப்ரீத்திக்குள் ஒரு வைராக்கியம்! இங்கே பணம், காசு ,சொத்து சுகம் எதுவும் சாஸ்வதமில்லை ,நிரந்தரம் இல்லை. இவை எதுவும் நமக்கு நிம்மதியை தரப்போவதில்லை, நாம் விரும்பும் வாழ்வை தரப்போவதில்லை, நாம் எப்படி வாழணும் என நாம் தான் தீர்மானிக்கணும். அதேபோல் செயல்படணும் பிறருக்கு பயன், மகிழ்ச்சி தரும் வகையில் வாழணும் இனி எல்லாம் சேவை தான் என முடிவெடுத்தார்.
கனவுகள் தகர்ந்தாலும்-- ப்ரீத்தியின் வைராக்கியம் தளரவில்லை. பழைய நிறுவனத்தில் மறுபடியும் வேலை தர தயாராக இருந்தும் அதை ஏற்க அவரது மனம் இடம் தரவில்லை.
அமெரிக்காவின் வாழ்க்கை முறை அவருக்கு வெறுப்பை தந்தது. அங்கே எல்லோரும் எப்பொழுதும் ஓட்டம்! எவரையும் பார்க்கும்—கவனிக்கும்- ஆதரவு பெறும் அளவிற்கு நேரமில்லை, மனசும் இல்லை, எல்லாம் செயற்கை சுகம்- ஆத்மார்த்தம் இல்லா நட்புகள்! அவரவர்கள் காரியமே அவர்களுக்கு இம்சையாக இருக்கிறது.
2013ல் மகன் பிரணவ் மற்றும் மகள் மானசாவுடன் இந்தியாவிற்கு வந்து சந்தோஷத்துடன் அவர்களை படிக்க வைத்தார். ஆனால் கணவருக்கு இந்தியாவில் சரியான வேலை அமையாததால் இரண்டு வருடத்தில் திரும்ப அமெரிக்காவில் அரிசோனாவிற்கு செல்ல வேண்டியதாயிற்று.
ப்ரீத்தி எதையெல்லாம் கனவு காண்கிறாரோ ,அவைகள் அவருக்கு தண்ணீர் காட்டி, தத்தளிக்க வைத்து பின் கிடைப்பதுண்டு. அந்த நேரம் கனவுகள் களையும்.,ஆனால் அவை திரும்பவந்து கதவை தட்டும். அமெரிக்கா திரும்பச் சென்றபோது சமூகத்தையும் பழகினவர்களையும் சந்திப்பதில் தர்ம சங்கடம் இருந்தது. நல்ல படிப்பு இருந்தும் தோற்று தோற்று முடங்குவதை குத்தி காட்டுவதை ப்ரீத்தியால் ஏற்க முடியவில்லை.
ப்ரீத்தி ஆளுமை மிக்கவர், அவருக்கு படிப்பிக்கும் தொழில் ரொம்ப பிடிக்கும். அதனால் அரிசோனாவில் பிரபல BASIS பள்ளியில் டீச்சராக சேர்ந்தார் .
கலாசாரம் காக்கும் துணிவு
அவருக்கு சேலை கட்டுவது பிடிக்கும் அங்கு இன்டர்வியூக்கு போனபோது மட்டுமல்ல அதன் பிறகு இன்று வரை சேலை உடுத்தி தான் செல்கிறார் பிறரின் வினோத பார்வையை அவர் பொருட்படுத்துவதில்லை.
பசங்களுடன் பழகுவதில்- அவர்களுக்கு பாடம் சொல்லித் தருவதில் ப்ரீத்திக்கு மகிழ்ச்சி, அந்த பருவத்தில் பசங்களிடம் கள்ளம் கபடம் இருக்காது போலித்தன்மை இல்லை சண்டையோ,சச்சரவோ கஷ்டமோ.. சிரிப்போ... அழுகையோ எல்லாமே நிஜம். யதார்த்தம். எதுவானாலும் அவற்றை அவர்கள் தொடர்ந்து மனதில் நிறுத்தி பகை பாராட்டுவதில்லை. அந்த குணங்கள் பெரியவர்களிடம் இல்லாததில் இவருக்கு வருத்தம்.
கோவிட் சமயம்:
கோவிட் சமயம் ப்ரீத்தி கலிபோர்னியா யுனிவர்சிட்டியில் ஆயுர்வேத “கிளினிக் ஸ்பெசலிஸ்ட்” படித்தார் அதை வைத்து இலவச மருத்துவ சேவையும் செய்ய ஆரம்பித்தார்.அடுத்து யோகா வகுப்புகள்! அங்கே கற்பவர்களுக்கு மட்டுமல்ல கற்பிப்பவர்களுக்கும் புத்துணர்ச்சி கிடைப்பது நிஜம். வாழ்வில் எல்லாமே எளிதாய் நடந்துவிட்டால் அருமை தெரிவதில்லை.கஷ்ட நஷ்டங்கள் தான் வாழ்வை படிப்பிக்கின்றன, அறிய வைக்கின்றன, நம்மை செம்மைப்படுத்துகின்றன.
அதன் பிறகு மகனின் படிப்பிற்கு வேண்டி அவர்கள் ஆஸ்டின் நகருக்கு குடிபெயர்ந்தனர்.. அங்குள்ள BASIS பள்ளியில் டீச்சராக சேர்ந்தார். அங்கு எதுவும் சரியாய் கடைப்பிடிக்கப்படாத நிலைமையில் அவரால் ஐக்கியப்பட முடியவில்லை.. அவற்றை சரி பண்ண வேண்டும் என்று நிர்வாகத்திடம் போய் துணிச்சலாய் பேசினார். ப்ரீத்தியின் அறிவு மற்றும் ஆற்றல் அறிந்து அவரை அங்கு டைரக்டர் ஆக்கினர். அதன் பிறகு , அங்கே எல்லாம் சரி செய்து, சிறப்பாய் நடந்துக்கொண்டிருக்கிறது.
இருபது வருடங்களாய் BASIS பள்ளிக்கு அமெரிக்கா முழுக்க 40 கிளைகள் உண்டு.ஆஸ்டினில் 1200 மாணவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள். சீனாவிலும் கூட இந்தப் பள்ளி பிரபலம். ஆரம்ப பள்ளியில் ஆரம்பித்து இன்று பன்னிரண்டாவது வரை நடக்கிறது. நம் மாணவர்கள் கற்றலிலும் ஆற்றலிலும் மிகத் தேர்ந்தவர்கள் என்பதை ப்ரீத்தி பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
இவர்களின் மகன் பிரணவ் நியூரோ சயின்ஸும், மகள் மானசா பத்தாம் வகுப்பும் படிக்கிறார்கள். அமெரிக்க சிட்டிசன் என்றாலும் கூட நம் கலாச்சாரம் பேணுகிறார்கள். மகன் கர்நாடக சங்கீதமும், மகள் பரதநாட்டியமும் கற்கிறார்கள். வாரிசுகள் இருவருமே இந்தியாவை மறக்காமல் அங்கு வந்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாகவும் மகிழ்வாகவும் இருக்கிறார்கள்.
ப்ரீத்தி எதிலும் எல்லாவற்றிலும் நேர்த்தியாக செயல்படுபவர். பிறரும் அப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுபவர் தம்பதிகள் இருவருமே ஆன்மீக பற்றுள்ளவர்கள்.
கணவர் சந்திரமோகன்
சந்திரமோகன் சென்னைவாசி; சேலத்தில் B.E எலக்ட்ரானிக்ஸ் படித்து சென்னை ஐரோப்பா என வேலை பார்த்து 25 வருடங்களாய் அமெரிக்காவில் பணி! தற்போது INSTRIDE கம்பெனியில் பணிபுரிகிறார்.
பிரச்சனைகள் எல்லாவற்றையும் சகஜமாக எடுத்து கடந்து போகும் மனோபாவம் எல்லாம் ஆன்மீகம் தரும் வரம்- என்கிறார் இவர்.சந்திரமோகன் வேதங்கள் படித்து வீடுகளிலும் கோயில்களிலும் வேதங்கள் படித்தும் வருகிறார் அத்துடன் இவர் யோகா மாஸ்டரும் கூட எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் நேர்மை நாணயத்துடன் கட்டுப்பாடான வாழ்க்கையில் பயணிக்க ஆன்மீகம் சக்தி கொடுக்கிறது என பெருமைப்படுகிறார்
வாழ்க்கை என்பதே கற்றல்தான்! கஷ்டங்கள் நம்மை புடம் போடுகின்றன. கஷ்டம் என்பது நமக்கு மட்டும்தான் என கலங்கி விடக்கூடாது உலகத்தில் எல்லோருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள்உள்ளன. அவற்றை அறியனும், உணரனும், அதிலிருந்து வெளியே வரனும்.
கஷ்ட- நஷ்டங்கள் -சோதனைகளை தூக்கி எறி! அவற்றை மற! நல்லதை நினை! ,அவற்றை அசைபோடு! திட்டமிடு!சரியாக செயல்படு.! சோதனைகள் வாழ்வில் வரும் அதற்காக தளர்ந்து போக கூடாது எதையும் சவாலாக எடுக்க வேண்டும்.
இவர்கள் இருவருமே பொதுநலம் சார்ந்து யோசிப்பவர்கள். அவலங்களைப் பார்த்து நமக்கேன் என கடந்து போவதில்லை, குறைகளை சுட்டிக்காட்டுவதோடு இல்லாமல் அவற்றை சரி பண்ணும் தீர்வோடு அவற்றை அணுகுவது இவர்களது சிறப்பு.
வாரிசுகளும் தங்கள் தேவைகளை தாங்களே அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வைக்கிறார்கள். அதன் மூலம் இளம் பருவத்திலேயே அவர்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கப்படுகிறது நெஞ்சுரம் -நேர்மை - துணிவுடன் செயல்படும் பக்குவம் பெறுகிறார்கள். கற்பித்தலின் முக்கியத்துவம்;
ப்ரீதி , BASIS பள்ளி தனக்கு கற்பித்தலின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் மேடையாக அமைந்தது என பெருமைபடுகிறார். ஒரு ஆசிரியராக, இயக்குனராக மற்றும் பள்ளித் தலைவராக கற்பித்தல் எனும் மாபெரும் சக்தியை ஆசிரியர்களுக்கு உணர்த்துகிறார். அவர்கள் அடுத்த தலைமுறையை வடிவமைக்கக் கூடிய சக்தி உடையவர்கள் என்பதை புரிய வைக்கிறார்.
“வெற்றி பெறுவதற்காக வெறியோடு பாடுபட்டபோது தோல்வியை சந்தித்தேன். தோல்விகள் எனக்கு நம்பிக்கையையும் புதிய தலைமுறையினருக்கு விடாமுயற்சி பற்றி சொல்லும் கதைகளையும் அளித்தன. எந்த நிலையிலும் விடாமுயற்சியுடன் போராடுவதற்கு தயாராக இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கின்றது.” என்று பெருமையுடன் குறிப்பிடும் ப்ரீதி, இந்தியாவிற்கு திரும்பி கலாச்சாரத்துடன் பயணிக்கவும், குழந்தைகளுக்கும், சுற்றியுள்ளவர்களுக்கும் அவர்களின் வேர்களை மறக்காமல் இருக்க செய்யவும், செயல்பட போகிறார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் தன்னலம் கருதாது சமூகத்திற்கு எதையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும். அதனால் கிடைக்கும் திருப்தி விலைமதிப்பற்றது.
ப்ரீதி, இந்தியா திரும்பிப் போய் விவசாயம் செய்யவும், ஆயுர்வேத சிகிச்சையை முறைப்படி தொடரவும் திட்டமிட்டிருக்கிறார். சந்திரமோகன் தம்பதியின் எதிகால லட்சியம் இந்தியா சென்று அங்கு சேவையை தொடரவேண்டும் என்பதே.
- என்.சி.மோகன்தாஸ்; படங்கள்: வினு தினேஷ்