
காஞ்சிபுரம் மடத்திற்கு வந்த அரசு பணியாளர் ஒருவர் மஹாபெரியவரை வணங்கி விட்டு, ''பெரியவா! பணம் இல்லாததாலே கஷ்டப்படுறேன். மாசக் கடைசியில கடன் வாங்கறேன்'' என வருத்தப்பட்டார்.
''பணம் இல்லைங்கிறதுனால மனைவி, குழந்தைகள் உன் மீது வெறுப்பு காட்டுறாங்களா'' எனக் கேட்டார் மஹாபெரியவர்.
''இல்ல பெரியவா! என் மீது அன்பா இருக்காங்க! காய்ச்சல், தலைவலி எனக்கு வந்தா கூட மனைவி தாங்க மாட்டா'' என்றார்.
இதைக் கேட்டு சிரித்த மஹாபெரியவர், ''சரி கொஞ்சநேரம் அங்கே உட்காரு'' என சொன்னார்.
அப்போது வயதான பணக்கார தம்பதியர் பழக்கூடை, பூக்கூடையுடன் வந்தனர்.
சுவாமியிடம், ''பெரியவா! என்னிடம் பணம் இருந்தும் பயனில்லை. இருவருக்கும் வியாதி. சரியா சாப்பிட கூட முடியலை. நிம்மதி இன்றி தவிக்கிறோம்'' என்றார்.
அதைக் கேட்ட அரசு ஊழியருக்கு, 'நான் ஆரோக்கியமா இருக்கேன். சுறுசுறுப்பா வேலை செய்றேன். இவருக்கு நான் எவ்வளவோ தேவலை' என்பதை உணர்ந்தார். மஹாபெரியவரை மீண்டும் வணங்கி விட்டு பிரசாதம் வாங்கினார்.
'பணம் மட்டுமே அவசியமல்ல. குடும்பத்தினரின் அன்பும், அரவணைப்பும் இருந்தால் போதும். எல்லோரின் வாழ்விலும் குறை இருக்கவே செய்யும். கிடைத்ததைக் கொண்டு நிம்மதியுடன் வாழ்வது நல்லது' என சொல்லாமல் சொல்லி அனுப்பினார் மஹாபெரியவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com