sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 23

/

பச்சைப்புடவைக்காரி - 23

பச்சைப்புடவைக்காரி - 23

பச்சைப்புடவைக்காரி - 23


ADDED : ஜூலை 18, 2024 12:33 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 12:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் வாழவைப்பேன்

ஆண்டொன்றுக்கு ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் தலைவரைப் பார்க்கச் சென்றேன். வரவேற்பு பகுதியில் பல இளைஞர்கள் இருந்தனர்.

என்னைப் பார்த்தவுடன் கணக்குப் பிரிவில் பணிபுரியும் மணி ஓடி வந்து,“தலைவர் பத்து நிமிஷத்துல வந்துருவாரு சார்”

“என்ன விசேஷம்? கூட்டமா இருக்கு?”

“பைனான்ஸ் மேனேஜருக்கு இண்டர்வியூ நடக்குது. சி.ஏ., அல்லது எம்.பி.ஏ., படிச்சு மூணு வருஷ அனுபவம் இருக்கணும். மாசம் 3 லட்சம். கார், விமானப் பயணம்னு ஏகப்பட்ட வசதி கொடுக்கறாங்க”

மணி சென்ற சில விநாடிகளில் ஒரு இளைஞன் தேடி வந்தான். “நான் சிவா. ஆடிட்டர் பிரகாஷோட மகன்”

அவனைத் தழுவிக் கொண்டேன். பிரகாஷ் என் நண்பன். பாவம் ஐம்பது வயதிலேயே மாரடைப்பால் இறந்தான்.

“இந்த வேலை கிடைச்சா கடனை அடைப்போம். அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. இப்போ கல்யாணத்துக்குப் பாத்துக்கிட்டிருக்காங்க.”

“வாழ்த்துக்கள் சிவா”

“பச்சைப் புடவைக்காரி கிட்ட வேண்டிக்கங்க, சார்.”

சிவாவிற்கே வேலை கிடைக்க பிரார்த்தித்தேன். என் காலில் சுள்ளென்று அடி விழுந்தது.

அந்த அறையை மெழுகிக்கொண்டிருந்தவள் முறைத்துப் பார்த்தபடி,“அவனுடைய கர்மக் கணக்கில் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய்?”

தாயை வணங்கினேன்.

“கடன் தொல்லை; தகப்பன் இல்லை''

“யாரை எப்படி வாழ வைக்க வேண்டும் என எனக்கு தெரியும்.”

தாய் மறைந்து விட்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு இளைஞன் தேடி வந்தான்.

“நான் வாசு. சி.ஏ., பரீட்சையில ஆல் இந்தியாவுல அஞ்சாவது ரேங்க். இந்த இண்டர்வ்யூவ பூன்னு ஊதித் தள்ளிருவேன். இருந்தாலும் நீங்க எனக்குத்தான் இந்த வேலை கிடைக்கணும்னு வேண்டிக்கணும்”

“நான் யாருன்னு''

“நல்லா தெரியும், நீங்க கேட்டா பச்சைப் புடவைக்காரி மாட்டேன்னு சொல்ல மாட்டா”

சட்டென என் காலைத் தொட்டு வணங்கிவிட்டு மறைந்தான் வாசு.

அதற்குள் தலைவர் என்னை அழைப்பதாகச் சொல்ல, அவர் அறைக்குச் சென்றேன்.போகும் வழியில் பச்சைப்புடவைக்காரி இருந்தாள். “இப்போது யாருக்காக பிரார்த்திப்பாய்? வாசுவிற்கா? சிவாவிற்கா?”

பதில் சொல்வதற்குள் அவள் மறைந்தாள்.

தலைவருடன் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தேன். கிளம்பும்போது அக்கவுண்டண்ட் மணியும் கூட வந்தார்.

“முடிவு எப்போ தெரியும்?”

“அஞ்சு மணிக்கு”

“யாரு செலக்ட் ஆயிருக்காங்கன்னு போன் பண்ணிச் சொல்றீங்களா?”

“நிச்சயமா. வாசுங்கறவருதான் செலக்ட் ஆவார். ஆல் இந்தியா ரேங்க். கம்பீரமா இருக்காரு. தலைவருக்குப் அந்த மாதிரி ஆளுங்களத்தான் பிடிக்கும்”

அன்று மதியம் சாப்பிடவில்லை. என் மனம் தவித்தது. சிவாவிற்கு வேலை கிடைத்தால் நல்லது. அவனுக்கே வேலை கிடைக்க வேண்டும் என வேண்டவும் பயமாக இருந்தது. சிவா அப்பாவி. அதிர்ந்து பேச மாட்டான். நல்லவன். ஆனால் நல்லவனாக இருந்தால் யார் மதிப்பார்கள்? சிவா இன்னும் துன்பப்படவேண்டும் என பச்சைப்புடவைக்காரி விரும்புகிறாள் போலும்.

மாலை ஐந்து மணி. சென்னையில் ஒரு உணவகத்தில் அமர்ந்திருந்தேன். பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால் சாப்பிடத்தான் மனமில்லை. என் அலைபேசி ஒலித்தது.

அக்கவுண்டண்ட் மணி.

“நான் சொன்ன மாதிரியே வாசுவ செலக்ட் பண்ணிட்டாங்க. அஞ்சு லட்சம் சம்பளம். வாசுவோட தகுதிகளப் பாத்து தலைவரே ஏத்திக் கொடுத்துட்டாரு சார்”

இருந்த கொஞ்ச பசியும் போய்விட்டது.

“என்ன சாப்பிடறீங்க?” எனக் கேட்டபடி வந்த சர்வரை உதாசீனப்படுத்தி விட்டு வெளியே செல்ல முயன்றேன். உணவகத்தின் கல்லாப் பெட்டியில் கம்பீரமாக இருந்த ஒரு பெண் அதட்டும் குரலில் கேட்டாள்.

“என் மீது கோபித்துக்கொண்டு போறியா?”

அவளை அடையாளம் கண்டதும் கண்கள் பொங்கின. “உன் நண்பனின் மகனை வாழவைக்கவில்லை என்பதுதானே கோபம்?”

தாயிடம் எதையும் யாசிக்கும் உரிமைகூட இல்லாத இந்தக் கொத்தடிமைக்குக் கோபம் வரலாமா? அழுகைதான் வந்தது.

“போய்ச் சாப்பிடு. நல்லதே நடக்கும்.”

“உங்கள் ராஜ்ஜியத்தில் நடப்பதெல்லாம் நல்லது தானே, தாயே?”

“இந்த அறிவு இருந்தால் உனக்குக் கோபமும் வருத்தமும் வந்திருக்கக்கூடாதே”

நான் தலை குனிந்தேன்.

கல்லாவிற்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் அமர்ந்தேன். இட்லி கொண்டுவரச் சொன்னேன். பச்சைப்புடவைக்காரியைப் பார்த்தபடியே சாப்பிட்டேன்.

என் அலைபேசி ஒலித்தது. அந்த நிறுவனத்தின் தலைவர்.

“ஆடிட்டர் சார், இன்னிக்கு இண்டர்வ்யூவுக்கு சிவான்னு ஒரு பையன் வந்தானே, அவன உங்களுக்குத் தெரியுமா?”

அதுதான் அவனை நிராகரித்து விட்டீர்களே! அப்புறம் என்ன விசாரிப்பு?

“ஏன் கேக்கறீங்க, சார்?”

“அந்தப் பையன் உங்களத் தெரியும்னு சொன்னான். அதான். பையன் எப்படி என்னன்னு தெரிஞ்சிக்கலாம்னு.. . “

வாசுவிற்கு வேலை கொடுத்தாகிவிட்டது என்ற விபரம் எனக்குத் தெரியாது என நினைத்துகொண்டு பேசுகிறாரோ?

சிவாவைப் பற்றி எனக்குத் தெரிந்ததையெல்லாம் சொன்னேன். படிப்பில் முன்னே பின்னே இருந்தாலும் குணத்தில் சொக்கத் தங்கம் என்றேன். அவனுடைய குடும்பச் சூழ்நிலையையும் கோடிட்டு காட்டினேன்...

எதிர்ப்பக்கம் சில விநாடிகள் கனத்த மவுனம் நீடித்தது. பின் தலைவர் குழைவான குரலில் பேசினார்.

“எனக்குச் சிவாவப் பார்த்தவுடனே பிடிச்சிப் போச்சி. என் ஒரே பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக்கிட்டிருக்கேன். இண்டர்வ்யூ நடக்கும்போது அவளும் கூடவே இருந்தா. அவளுக்கும் அவன ரொம்பப் பிடிச்சு போச்சி. அதனால என் பொண்ண சிவாவுக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். சிவா வீட்டுக்கு சம்பந்தம் பேசப் போகும் போது நீங்க கூட இருந்தா நல்லது”

அதன்பின் தலைவர் பேசியது எதுவும் என் மண்டையில் ஏறவில்லை. கையைக் கூடக் கழுவாமல் பச்சைப்புடவைக்காரியிடம் ஓடினேன்.

“யாருக்கு எதை எப்போது கொடுக்க வேண்டும் என எனக்குத் தெரியும். சிவாவிற்காக ஒரு அதிகாரி வேலையைத் தான் கேட்டாய். நான் அவனை ஆயிரம் கோடி ரூபாய்ச் சொத்திற்கு வாரிசாக்கி விட்டேன். உனக்கு என்ன வேண்டும் சொல்”

“நாங்கள் கேட்டதை மறுத்துவிட்டு எங்களுக்கு வேண்டியதைக் கொட்டிக் கொடுக்கும் கருணைக்கடல் நீங்கள். உங்கள் கருணையைப் புரிந்து கொள்ளும் மனதை யாசிக்கிறேன், தாயே”

சிரிப்பு சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன். பச்சைப்புடவைக்காரி மறைந்து விட்டாள்.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com






      Dinamalar
      Follow us