
ஏழையான சாம்பனுக்கு இரண்டு நாளாக வேலை ஏதும் கிடைக்கவில்லை. பட்டினியுடன் இருந்த அவன் அருகிலுள்ள குளத்தில் தண்ணீர் குடிக்கச் சென்றான். அங்கு அழகிய தாமரை ஒன்று அவனைப் பார்த்துச் சிரித்தது.
அதை விற்றால் காசு கிடைக்கும் என நினைத்து அதை பறித்தான். அப்போது எதிர்ப்பட்ட வியாபாரி ஒருவர் பூவைத் தந்தால் பணம் தருவதாகச் சொன்னார். ஆனால் அவன் ஏற்கவில்லை.
சிறிது நேரத்தில் செல்வந்தர் ஒருவர் அவனிடம், ''இதை எனக்கு கொடு. பணம் தருகிறேன்'' என்றார். அப்போதும் அவன் சம்மதிக்கவில்லை.
கூடுதல் விலைக்கு விற்கலாம் என அவன் நினைத்ததே இதற்கு காரணம்.
சிறிது நேரத்தில் அந்த ஊரின் பண்ணையார் அருகில் வர, ''இதை தருவாயா? வெள்ளி நாணயம் தருகிறேன்''என்றார்.
அதைக் கேட்டு, '' ஏன் வெள்ளி நாணயம் தருவதாக சொல்கிறீர்கள்?''எனக் கேட்டான்.
''உனக்கு விஷயம் தெரியாதா... சிவனடியாரான சங்கரர் நம் ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு கொடுத்தால் மகிழ்வார் அல்லவா?'' என்றார்.
இதைக் கேட்டதும் நீண்ட நாளாக அவரை தரிசிக்க நினைத்த அவன், அவரது இருப்பிடத்தை அடைந்தான்.
சிவனடியாரிடம் தாமரை மலரை கொடுத்து வணங்கினான்.
'' இந்த மலரை விற்றால் காசு கிடைக்குமே! என்னிடம் கொடுக்கிறாயே''என்றார் சிவனடியார்.
''சுவாமி... சாதாரண பூவாக எண்ணி விற்க நினைத்தேன். தங்களின் வருகையை அறிந்ததும் அது பூஜைக்குரியதாக உயர்ந்தது. அதை தங்களிடம் கொடுப்பதை விட வேறு பாக்கியம் என்ன இருக்கிறது?'' என்றான்.
''அன்பு மனம் கொண்ட நீயே புண்ணியம் செய்தவன்'' என ஆசியளித்தார்.