'ராகதேவன்' உடன் ஒரு ஆனந்தமான, ஆன்மிக பயணம் : கார்த்திக் சுப்பராஜ்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 10வது படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ செய்தியை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்கள். இளையராஜா ஸ்டுடியோவில் படத்திற்காக நடக்கும் இசைப் பணியில் கார்த்திக் சுப்பராஜ் இருக்கும் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்கள். அன்றைய தினம் அது பற்றி ஒரே வரியில், “ஒரு கனவு, ஒரு ஆசி' என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார் கார்த்திக் சுப்பராஜ்.
இன்று இளையராஜாவுடன் இணைந்திருப்பது குறித்து ஒரு நீண்ட பதிவிட்டுள்ளார். அதில்,
‛‛என் பத்தாவது படம் என் இதயத்தில் ஆழமாக வேரூன்றிய கதை. 'மகான்' படத்துக்குப் பிறகு உடனடியாக நான் எடுக்க வேண்டும் என்று விரும்பிய படம் இதுதான். நான் நம்புவது போல், ஒரு கதை தன் கதை சொல்லியைத் தேர்ந்தெடுக்கிறது, அதைச் சொல்ல வேண்டிய நேரத்தையும் தேர்ந்தெடுக்கிறது. இந்தக் கதை தன் சொந்த நேரத்தை எடுத்துக்கொண்டது. இப்போது சிறந்த மக்களுடன் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
சரியான தயாரிப்பாளர்களைப் பெற்றதில் ரொம்பவே மகிழ்ச்சி... குனீத் மொங்கா & அசின் ஜெயின். முதல் விளக்கத்தில் இருந்தே என் பார்வையோடு அவர்கள் முழுமையாக ஒத்துப்போனார்கள். என் கனவு இப்போது அவர்களின் கனவாகவும் மாறியிருக்கிறது. உலகத்துக்கு இப்படத்தைக் காட்ட நாங்கள் கிட்டத்தட்ட தயாராக இருக்கிறோம்.
ஜோதி தேஷ்பாண்டே, ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மெண்ட் அனைவருக்கும் நன்றி மிகவும்.
இந்தப் படத்துக்கு நிகழ்ந்த மிகவும் அற்புதமான, அதிசயமான ஆசீர்வாதம்... 'மேஸ்ட்ரோ' இளையராஜா சார், இதற்கு இசையமைத்திருப்பதுதான். அவரின் 1540வது படம் இது.
நான் ராஜா சாரின் இசையுடன் வளர்ந்தவன். என் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு உணர்ச்சியும் — மகிழ்ச்சி, சோகம், காதல், கோபம், இரக்கம், பச்சாதாபம், உந்துதல்... அனைத்தும் — அவரின் ஒரு பாடலோ, பின்னணி இசையோ உடன் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருக்கும். அவர் எனக்கு ஒரு வாழ்க்கை முறையே. நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோருக்கும் அப்படித்தான்.
எப்போதும் அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவுதான். ஆனால் முந்தைய படங்களோடு அவரிடம் செல்ல எனக்கு தைரியம் வரவில்லை. ஆனால் இந்தப் படத்தை முதல் கட் முடித்ததும், ராஜா சாருக்கு காட்ட வேண்டும் என்று தோன்றியது. அவர் நிச்சயம் ஒப்புக்கொள்வார் என்று உறுதியாக நம்பினேன். அவரும் ஒப்புக்கொண்டார்.
சனிக்கிழமை மாலையில் படத்தை அவர் பார்த்தார். படத்தை அவர் ரொம்பவே விரும்பினார். அடுத்த நாள் காலையிலிருந்தே வேலையைத் தொடங்கலாம் என்று சொன்னார். அதன் பிறகு அடுத்த 25 நாட்கள் 'ராகதேவன்' உடன் ஒரு ஆனந்தமான, ஆன்மிக பயணமாக மாறியது.
இந்த இதிகாசம் இசையைப் படைப்பதை நேரில் பார்ப்பது... முற்றிலும் அற்புதமான, உண்மையான ஆசீர்வாதம்.
ராஜா சார் சொன்னார் — பாடல்களைத் தவிர, இந்தப் படத்தின் பின்னணி இசைகளைத் தனியாக ஒரு ஆல்பமாகப் படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட வேண்டும் என்று. ஆம், அதை விரைவில் வெளியிடப் போகிறோம். நீங்கள் அனைவரும் அதைக் கேட்டு, உணர்ந்து, உருகப் போவதை எதிர்பார்த்து என்னால் காத்திருக்க முடியவில்லை...'' என மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.