உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே ஆண்டில் இரண்டு இழப்புகள் : ராதிகா வருத்தம்

ஒரே ஆண்டில் இரண்டு இழப்புகள் : ராதிகா வருத்தம்

தமிழ்த் திரையுலகத்தின் முக்கியமான நடிகைகளில் ஒருவர் ராதிகா சரத்குமார். 1978ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'கிழக்கே போகும் ரயில்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். சுமார் 50 ஆண்டு காலமாக தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் நடித்தவர். சினிமாவிலிருந்து டிவிக்கும் சென்று பெரும் வெற்றி பெற்றவர்.

அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து இந்த வருடம் வெளிவந்த 'தாய் கிழவி' படம் 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றியைப் பெற்றது. இயக்குனர் பாரதிராஜா நேற்று காலை மறைந்ததும் உடனடியாக அவரது வீட்டிற்குச் சென்று அங்கேயே இருந்து ஒரு மகளைப் போல அஞ்சலி செலுத்த வந்தவர்களை கவனித்தார். தொடர்ந்து இன்று தேனியிலும் அவர் உள்ளார்.

நேற்றிரவு எக்ஸ் தளத்தில், “என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்; மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா. இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன். இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் கனத்திருக்கிறது.

என் வலியை உணர்ந்து, என்னுடன் நின்று, அன்பும் ஆதரவும் அளித்த ஒவ்வொருவருக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் நினைவுகளும், அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களும் என்னுடன் என்றும் பயணிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

பாரதிராஜாவை சமீபத்தில் சந்தித்திருந்தார் ராதிகா. அது குறித்த வீடியோவையும் பதிவிட்டிருந்தார். அப்போது 'தாய் கிழவி' படத்தைப் பார்த்தது குறித்து பேசியிருந்த பாரதிராஜா, 'தாய் கிழவி' படத்திற்காக ராதிகாவுக்கு தேசிய விருது வரணும்' என்று வாழ்த்தியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ராதிகா, “நீங்க சொல்ற மாதிரி வரட்டும், முதல்ல உங்க கால்ல வந்து வச்சிடறேன்,” எனக் கூறினார்.

அப்படி ஒன்று நடக்குமா என்பது இனிமேல்தான் தெரியும், ஆனால், அதற்குள் பாரதிராஜா மறைந்துவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Natarajan Ramanathan, தேவகோட்டை
2026-06-11 18:13:54

பாரதிராஜா இறந்துவிட்டார். இனிமேல் விருது வாங்கினால் யார் காலில் வைப்பது என்று குழப்பம் வரும். எனவே விருது கொடுக்கக்கூடாது.