கார் எண்ணை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக 'திரிஷ்யம் 3' படக்குழு மீது போலீசில் புகார்
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஏற்கனவே 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. சமீபத்தில் அதன் மூன்றாம் பாகமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று 230 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ராஜீவ் என்பவர் இந்த படத்தில் மோகன்லால் பயன்படுத்தும் காருக்கு தான் பயன்படுத்தி வருகின்ற காரின் பதிவு எண்ணை தனது அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக மூணார் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறும்போது, “மோகன்லால் இந்த படத்தில் பயன்படுத்தும் காருக்கு என்னுடைய வாகன எண்ணை அனுமதி இன்றி பயன்படுத்தி இருக்கிறார்கள். இதில் காட்டப்படும் எண்ணை வைத்து ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அது நிஜமான வாகன உரிமையாளரான என்னை வம்பில் இழுத்து விடும். இதனால் தனிப்பட்ட முறையிலும் சட்டரீதியாகவும் எனக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இந்த படத்தில் என்னுடைய கார் எண் இடம்பெறும் காட்சிகளை எல்லாம் நீக்க வேண்டும்” அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த காட்சிகளை நீக்காவிட்டால் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக அடுத்த கட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.