பிளாஷ்பேக்: எம்ஜிஆர், வைஜெயந்திமாலா நடித்த ஒரே படம்
1924ல் வெளியான அமெரிக்க மவுன படமான 'தி தீப் ஆப் பாக்தாத்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி தமிழில் உருவான படம் 'பாக்தாத் திருடன்'. இதில், எம்.ஜி.ஆர், வைஜெயந்தி மாலா, சந்தியா, எம்.என்.ராஜன், நம்பியார், டி.எஸ்.பாலையா, டி.ஆர்.ராமச்சந்திரன், அசோகன், எஸ்.என்.லட்சுமி, சந்தியா உட்பட பலர் நடித்தனர்.
இந்த படத்தில் சில முக்கிய அம்சங்கள் உண்டு. பின்னாளில் எம்ஜிஆருக்கு வில்லனாக கலக்கிய அசோகன் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த முதல் படம். எம்ஜிஆர் இஸ்லாமியராக நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. இந்த கதையை பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட செட்போட்டு எடுத்தால்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்து நடித்த படம். அந்த வகையில் அந்த காலத்தில் 10 லட்சத்தில் எடுக்கப்பட்ட முதல் பிரமாண்ட எம்ஜிஆர் படம்
எம்ஜிஆரின் தந்தையும், நாட்டின் அரசனும் அரசியும் துணைத் தளபதியின் வஞ்சகத்தால் கொல்லப்படுகிறார்கள். அங்கிருந்து தப்பிக்கும் சிறு குழந்தையான எம்ஜிஆர் திருடர்கள் கூட்டத்தால் வளர்க்கப்பட்டு திருடனாகிறார். இருப்பவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் அவர், கொடுங்கோல் ஆட்சி நடத்தும் போலி அரசனை வீழ்த்தி எப்படி வெல்கிறார் என்பது கதை.
சதர்ன் மூவிஸ் சார்பில் ஹரிலால் பட்டேவியாவுடன் இணைந்து டி.பி.சுந்தரம் தயாரித்தார். திரைக்கதையை ரவீந்தர் அமைக்க, கதை, உரையாடலை ஏ.எஸ்.முத்து எழுதினார். டி.பி.சுந்தரம் இயக்கிய இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசை அமைத்தார்.
வைஜெயந்தி மாலாவை 'ஆடல் அழகி' என்ற பட்டத்துடன் டைட்டில் கார்ட்டில் போட்டிருந்தார்கள். இந்தி நடிகை ஹெலன், பத்மினிப் பிரியதரிசினி, கோபிகிருஷ்ணா ஆகியோரின் நடனங்களும் இடம்பெற்றிருந்தன. எம்.ஜி.ஆர், வைஜெயந்திமாலா சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான்.