நடிகர் சங்கத்தில் நடிகைகள் மோதல் முற்றுகிறது
'அம்மா' என்று அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக ஸ்வேதா மேனன் இருக்கிறார். தற்போது நடிகர்கள் சங்கத்தில் இருந்து சற்று விலகி நிற்க நடிகைகள் தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். சங்கத்தில் இணை செயலாளரான அன்சிபா ஹாசன் (திரிஷ்யம் படத்தில் நடித்தவர்) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதோடு மற்ற நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறினார். சங்கத்தின் செயற்பாடுகள் முறையாக இல்லை என்றும், சில உறுப்பினர்கள் இந்த அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். நடிகர் டினி டோம் தன்மீது அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகவும் அவர் புகார் அளித்தார்.
அன்ஷிபாவின் குற்றச்சாட்ட தொடர்ந்து துணை தலைவராக இருக்கும் நடிகை லட்சுமி பிரியா, அன்சிபா ஹசன் மீது ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி மானநஷ்ட வழக்கு தொடர்வதாக தெரிவித்ததால் மோதல் முற்றியது. நடிகர் சங்கத்தில் உள்ள நடிகைகள் இரு அணிகளாக பிரிந்து மோதிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லட்சுமி பிரியா, திருப்புனித்துரா மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் அதே காவல் நிலையத்தில் ஹன்சிபா கொடுத்த புகாரை போலீசார் ஏற்கவில்லை. இதனால் திருப்புனித்துரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அன்சிபா ஹசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 'நான் ஏற்கனவே அளித்த புகார் குறித்து போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. அரசியல் செல்வாக்கு மற்றும் தலையீடு காரணமாகவே போலீசார் எனது புகாரை நிராகரித்து நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நடிகையின் புகார் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்கிறது. இந்நிலையில், நடிகைளின் மோதல் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.