இரண்டு வார மவுனத்திற்கு பிறகு சோசியல் மீடியாவுக்கு வந்த ஜான்வி கபூர்!
ராம்சரண் நடிப்பில் உருவான 'பெத்தி' படம் திரைக்கு வந்தபோது அப்படத்தின் நாயகியாக நடித்திருந்த ஜான்வி கபூரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்தது. அவரும் அதிர்ச்சி மனநிலையில் இருந்ததாக தகவல் வெளியாகின. அதோடு இயக்குனர் புச்சி பாபு மீதான விமர்சனங்களும் இந்த விவாதத்தை வலுப்படுத்தின. இந்த படத்தில் ஜான்வி கபூரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்றும், அது கவர்ச்சியை மையமாகக் கொண்டே காட்டப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் விமர்சனங்களும் கருத்துக்களும் வெளியாகின. இதனால் அந்த சமயத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெத்தி படம் தொடர்பான எதையும் பதிவிடாமல் தவிர்த்து, இணையப் பக்கத்தில் அதிகமாக தலை காட்டாமல் இருந்து வந்தார் ஜான்வி கபூர்.
இந்நிலையில் தற்போது ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் மீண்டும் சமூக ஊடக செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். தனது சகோதரி, செல்ல நாய் மற்றும் நண்பர்களுடன் செலவிட்ட நேரங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அதோடு பாடகி ஜெஸ்லின் ராயலின் சமீபத்திய பாடலை பாராட்டி அவரையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் ஜான்வி கபூர் தற்போது பெத்தி பட விவகாரத்தை மறந்து விட்டு தனது வழக்கமான அன்றாட நடவடிக்கைகளுக்கு திரும்பி இருப்பதை இந்த புதிய வீடியோ பதிவு உணர்த்துகிறது.