உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த வயது வித்தியாசம் அவசியமானது ; துரந்தர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாரா அர்ஜுன்

இந்த வயது வித்தியாசம் அவசியமானது ; துரந்தர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாரா அர்ஜுன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து ஹிந்தியில் வெளியான 'துரந்தர்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, இரண்டு படங்களும் சேர்த்து கிட்டத்தட்ட 3000 கோடிக்கு மேல் வசூல் செய்தன. இந்த படத்தின் மூலம் பல நட்சத்திரங்கள் இந்திய அளவில் பிரபலமானார்கள். குறிப்பாக, தமிழில் 'தெய்வத்திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்தில் இளம் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாரா அர்ஜுன், துரந்தர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதுமட்டுமல்ல, ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். 40 வயதான ரன்வீர் சிங்கிற்கு 20 வயதான சாரா அர்ஜுன் ஜோடியா என்று சமூக வலைதளங்களில் இந்த படம் வெளியான போது விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி சாரா அர்ஜுனிடம் கேட்டபோது, சமூக வலைதளங்களில்தான் இப்படி சலசலப்பெல்லாம் நடக்கிறது. நான் சோசியல் மீடியாவில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லை. அதனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு இந்த படத்தின் முழு கதையும் தெரியும். கதையின்படி ரன்வீர் சிங்கின் கதாபாத்திரம் ஒரு இளம்பெண்ணை தனது உளவாளி வலைக்குள் வீழ்த்த வேண்டும். அதற்கு இந்த வயது வித்தியாசம் மிகவும் அவசியமானது. கதையின் சூழலுக்கு இந்த தேர்வு முற்றிலும் நியாயமானது என்று எனக்குத் தெரியும். அது மட்டும்தான் எனக்கு முக்கியம் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !