காஜல் அகர்வாலின் பிறந்த நாளில் வெளியான முதல்பார்வை போஸ்டர்
ஹிந்தியில் சிக்கந்தர் படத்துக்கு பிறகு, தற்போது ராமாயணா படத்தின் இரண்டு பாகங்களிலும் மண்டோதரி வேடத்தில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். அதையடுத்து தெலுங்கில் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் 111 வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நேற்று காஜல் அகர்வாலின் 41 வது பிறந்த நாள் என்பதால் இப்படத்தில் அவர் நடித்துள்ள கேரக்டரின் போஸ்டரை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
அந்த போஸ்டரில், புடவை கெட்டப்பில் கண்ணாடி அணிந்த தோற்றத்தில் காணப்படுகிறார் காஜல் அகர்வால். ஒரு அலுவலக பின்னணியில் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
1993 ஆம் ஆண்டு பம்பாய் பின்னணி கதையில் உருவாகி வரும் இந்த பாலகிருஷ்ணா 111வது படத்தின் படப்பிடிப்பு மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. ஆக் ஷன் பொழுதுபோக்கு கதையில் உருவாகும் இந்த படத்தில் மனோஜ் மஞ்சு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.