மாமா சுதீஷ் தயாரிக்கும் படத்தில் மருமகன் சண்முகபாண்டியன் நடிக்கிறார்
மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்து வருகிறார். ‛சகாப்தம்' படத்தில் அறிமுகம் ஆனவர், மதுரவீரன், படைதலைவன், கொம்புசீவி படங்களில் நடித்தார். இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது தாய்மாமா எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் அகத்தியன் மருமகனும், சமர், தீராத விளையாட்டு பிள்ளை பட இயக்குனருமான திரு இயக்குகிறார். இந்த படத்தை கேப்டன் சினி கிரியேஷன் சற்றே இடைவேளிக்குபின் தயாரிக்கிறது.
இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சில மாதங்களுக்குமுன்பு கேப்டன் பிரபாகரன் 2 படத்தில் அல்லது ஆர்.கே.செல்வமணி இயக்கும் படத்தில் அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ரெடி என சண்முகபாண்டியன் சொன்னார். அந்த படங்களை தயாரிக்க எல்.கே.சுதீஷ் ஆர்வமாக இருந்தார். ஆனால், அது நடக்கவில்லை.
விஜயகாந்த்தால் பலன் பெற்ற பல இயக்குனர்கள், நடிகர்கள் சண்முகபாண்டியனுக்கு உதவவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், மருமகனுக்காக மாமாவே படம் தயாரிக்கிறார். இதற்கு முன் வல்லரசு (2000), நரசிம்மா (2001), தென்னவன் (2003), எங்கள் அண்ணா (2004), சுதேசி (2006), அரசாங்கம் (2008) விருதகிரி (2010) ஆகிய படங்களை கேப்டன் சினி கிரியேஷன் தயாரித்துள்ளது.