இயக்குனர் ஆகிறார் காமெடி நடிகர் கிளி ராமசந்திரன்
நடிகர் விவேக், மயில்சாமியுடன் இணைந்து பல காமெடி செய்தவர் கிளி ஏ.வி.ராமசந்திரன். இவர் ‛வாழ்க்கையே போராட்டம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆகிறார். சென்னையில் நடந்த பூஜையில் இயக்குனர் பேரரசு, சுப்ரமணியம் சிவா கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர்.
இயக்குனர் ஏ.வி.ராமசந்திரன் கூறியது '' 1997ம் ஆண்டு முதல் சினிமாவில் இருக்கிறேன். ஆரம்பத்தில் ஒவ்வொரு கம்பெனியாக அலைந்து வாய்ப்பு தேடுவேன். சின்ன, சின்ன கேரக்டர் கிடைக்கும். அப்புறம், விவேக், மயில்சாமி நிறைய வாய்ப்பு கொடுத்தனர். அவர்கள் படங்களில் எனக்கு , என்னை போன்ற பலருக்கு உரிமையாக பேசி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தனர். எங்கள் வாழ்க்கை நன்றாக ஓடியது.
இப்போது இரண்டு பேரும் மறைந்துவிட்டார்கள். விவேக் ஆபீசில் என்னை தங்க அனுமதித்தார். ஏகப்பட்ட உதவிகள் செய்வார். மயில்சாமி தன்னிடம் பணம் இல்லாவிட்டால் கூட கடன் வாங்கி பலருக்கு உதவிகள் செய்ததை நான் பார்த்து இருக்கிறேன். அவர்கள் போனபின் என் வாழ்க்கையும் மாறிவிட்டது. அவர்களை நம்பி இருந்த என்னை போன்ற பலர் பாதிக்கப்பட்டோம். இப்போது இந்த படத்தை இயக்குகிறேன்.
நான் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவன். காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்து இருக்கிறேன். ஓரளவு அரசியல் தெரியும். அந்த அனுபவத்தில் இந்த படத்தை அரசியல், காமெடி கலந்து இயக்குகிறேன். நகைச்சுவை நடிகர் செந்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். என்னுடன் பல ஆண்டுகாலமாக இருந்த நண்பர்களும் நடிக்கிறார்கள். இயக்குனர் பேரரசு, சுப்ரமணியம் சிவாவும் நடிக்கிறார்கள்'' என்றார்.