'ஒன் லாஸ்ட் டைம்' : முதல்வர் விஜய்யின் கடைசி படமாக வரும் 'ஜனநாயகன்'
'ஒன் லாஸ்ட் டைம்' மற்றும் 'ஒன் லாஸ்ட் டான்ஸ்' என கடந்த சில மாதங்களாகவே விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' பற்றி அவரது ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.
தீவிர அரசியலில் இறங்குவதால் 'ஜனநாயகன்' படம்தான் தனது கடைசி படம் என அறிவித்தார் விஜய். அவரது இந்த அறிவிப்புக்கு தமிழக 'ஜனங்களின்' வரவேற்பு கிடைத்து போட்டியிட்ட முதல் சட்டசபைத் தேர்தலிலேயே அந்த 'ஜனங்களின் நாயகன்' ஆக முதல்வர் ஆகப் பதவியேற்றார்.
அவரது கடைசி படமான 'ஜனநாயகன்', தணிக்கை சான்றிதழ் சிக்கலில் சிக்கி ஆறு மாதகமாக காத்திருந்தது. இடையில் திருட்டுத்தனமாக இணையங்களில் வேறு லீக் ஆனது. ஒரு வழியாக சமீபத்தில் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டு அடுத்த சில நாட்களில் படத்தின் வெளியீடு ஜூலை 23 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வினியோக முறைகளில் சில கட்டுப்பாடுகளைத் தயாரிப்பாளர்கள் விதித்துள்ள சர்ச்சையான சூழலில் இந்தப் படம் வெளியாக உள்ளது. கட்சி பாகுபாடில்லாமல் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்து வெற்றி பெற வைப்பார்களா அல்லது விஜய்யின் ரசிகர்கள், அவரது தவெக கட்சித் தொண்டர்கள் மட்டுமே பார்த்து வெற்றி பெற வைப்பார்களா என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரியும்.
இருந்தாலும் இந்த வாரம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முன்னணி நாயகனின் வசூலும், வரவேற்பும் கடைசியாக அமையப் போகும் ஒரு நாளாக அமையப் போகிறது.
மீண்டும் விஜய் நடிக்க வருவாரா என்பது அவரது அரசியல் எதிர்காலம்தான் தீர்மானிக்கும். அதுவரையில் 'ஜனநாயகன்' அவரது கடைசி படமாக இருக்கும்.