தமிழில் ராணுவ அதிகாரியாக நடிக்கும் கன்னட நடிகை
இரட்டை சகோதரிகளான அத்விதி ஷெட்டி, அஷ்விதி ஷெட்டி ஆகிய இருவரும் 'மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி' படத்தின் மூலம் அறிமுகமானார்கள். தற்போது கன்னடம் மற்றும் துளு மொழி படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் 'நோவா' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் அத்விதி ஷெட்டி.
புதுமுகம் மைலோ இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் சயின்ஸ் பிக் ஷன் சூப்பர் நேச்சுரல் பேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. கதையின் நாயகியாக ரைசா வில்சன் நடிக்கிறார்.. இன்னொரு கதாநாயகியாக, அத்விதி ஷெட்டி நடித்துள்ளார்.
அத்விதி ஷெட்டி கூறியதாவது: 'வல்லபி' என்ற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இதுவரையிலான திரைப்பயணத்தில் மிகவும் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரம் இதுதான். இந்தக் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவமும், வலுவான நடிப்பு வாய்ப்பும், நிறைய வசனங்களும் உள்ளன..
இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம். அதோடு நிறைய சஸ்பென்ஸும் இருக்கிறது. எனக்கு இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. எனக்கு தமிழ் புரியும்.. தமிழ் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். ஆனால் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லாததால் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் படப்பிடிப்பில் நான் வசனங்களை மிக விரைவாக கற்றுக்கொண்டேன்.
பெரும்பாலும் மலைப்பகுதி மற்று காடுகளின் உள்ளார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியதால் எங்களுக்கான காரவன்கள் தூரத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. கழிப்பறைக்குச் செல்லவும் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. மேலும் நான் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்ததால் கனமான ராணுவ பூட்ஸ்களை அணிய வேண்டியிருந்தது. அவற்றை அணிந்து நடப்பதே மிகவும் கடினமாக இருந்தது. அந்த சமயத்தில் இருந்துதான் நமது நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை இன்னும் அதிகமாக மதிக்கத் தொடங்கினேன்.
படத்தில் என் அறிமுகக் காட்சியே மழைக் காட்சியாக இருந்தது. நள்ளிரவு நேரத்தில் மூணாரின் கடும் குளிரில் டேங்கர் தண்ணீரை எங்கள் மீது ஊற்றி படமாக்கினர். 24 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அது மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது நோவா வெளியான பிறகு தமிழில் மேலும் பல படங்களில் நடிக்க விரும்புகிறேன். என்றார்.