உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வர் விஜயின் ‛ஜனநாயகன்' படம் வெளியானது : டைட்டில் கார்டில் சர்ப்ரைஸ்... ரசிகர்கள் கொண்டாட்டம், அமைச்சர்கள் கண்ணீர்

முதல்வர் விஜயின் ‛ஜனநாயகன்' படம் வெளியானது : டைட்டில் கார்டில் சர்ப்ரைஸ்... ரசிகர்கள் கொண்டாட்டம், அமைச்சர்கள் கண்ணீர்

சென்னை: முதல்வர் விஜய் நடித்துள்ள ‛ஜனநாயகன்' திரைப்படம் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இன்று அதிகாலை 6 மணிக்கும், தமிழகத்தில் காலை 9 மணிக்கும் வெளியானது. ரசிகர்களுடன் சேர்ந்து அமைச்சர்களும் படத்தை பார்த்து ரசித்தனர்.

வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஜன., 9ம் தேதியே வெளியாக வேண்டியது. தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் தடை, கோர்ட்டில் வழக்கு, மறு தணிக்கை என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து, 6 மாதத்திற்கு பின் இன்று (ஜூலை 23) படம் வெளியானது.

நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு, தமிழக முதல்வராகப் பதவியேற்ற 75வது நாளில் இந்தப் படம் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனநாயகன் படம், தமிழகத்தில் 1000 தியேட்டர்களிலும், இந்தியா முழுக்க 3,000 தியேட்டர்களிலும், உலகம் முழுக்க 5000க்கும் அதிகமான தியேட்டர்களிலும் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்



தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லாத காரணத்தால் படம் 9 மணிக்கு தான் வெளியானது. அதனால் அண்டை மாநிலங்களான கேரளா, தெலுங்கு, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் காலை 6 மணி மற்றும் 7 மணியளவில் வெளியானது. தமிழகத்தில் தாமதமாக காட்சிகள் ஆரம்பமானதால் தமிழக எல்லையை ஒட்டி மாநிலங்களுக்கு சென்று படம் பார்த்தனர். முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி, படத்தை வரவேற்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம், பட்டாசு வெடித்து ரசிகர்கள் படத்தை வரவேற்றனர். அனைத்து தியேட்டர்களிலும் கட்-அவுட் அதற்கு மாலை, தோரணங்கள், சில ஊர்களில் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் என ரசிகர்கள் கொண்டாடினர்.

டைட்டில் கார்டில் சர்ப்ரைஸ்



தேர்தலுக்கு முன் படம் தாமதமான சமயத்தில் பரவாயில்லை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வர் விஜய் நடித்த என டைட்டில் கார்டில் போடுவோம் என ரசிகர்கள் பலரும் தெரிவித்தனர். அவர்கள் சொன்னது போன்றே நடந்துவிட்டது. விஜய் முதல்வராகிவிட்டதால் ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்டில் 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி.ஜோசப் விஜய்' நடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்துள்ளனர். முதல்வர் விஜய் வெற்றி பெற பிறகு நடந்த சில ஸ்டில்கள் அவரது மேனரிசங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

கண்ணீர் விட்ட அமைச்சர்கள்



ஜனநாயகன் படத்தை ரசிகர்கள் தாண்டி அமைச்சர்களும் வரவேற்றுள்ளனர். பல்வேறு தியேட்டர்களில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், முகமது பர்வேஷ் உள்ளிட்டோர் படத்தின் முதல் காட்சியை பார்த்தனர். படம் பார்த்த பிறகு அவர்கள் கண்ணீர் விட்டனர். இனி அவரை திரையில் பார்க்க முடியாது என்பது கஷ்டமாக உள்ளது, கண்ணீர் வந்தது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்க்காக ஒன் லாஸ்ட் சான்ஸ்



முதல்வர் விஜயின் கடைசி படம் என்பதால் அவரது, ரசிகர்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளை தாண்டி திரைப்பிரபலங்கள் பலரும் படம் பார்க்க ஆர்வம் காட்டினர். சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் இசையமைப்பாளர் அனிருத், நாயகிககள் கீர்த்தி சுரேஷ், மமிதா பைஜூ, தயாரிப்பாளர் கேவி வெங்கட் நாராயணா உள்ளிட்டோர் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தனர்.

எம்ஜிஆர்-க்கு பின் விஜய்



மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கு அடுத்து எத்தனையோ நடிகர்கள் அரசியலில் இறங்கினாலும் அவருக்கு அடுத்து முதல்வராகும் வாய்ப்பு விஜய்க்கு மட்டும்தான் கிடைத்துள்ளது. எம்ஜிஆர் முதல்வராகப் பதவியேற்ற பின்பு 'மீனவ நண்பன்' படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது. கடைசி படமாக 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வெளியாகி தோல்வியைத் தழுவியது. அதேப்போல் எம்ஜிஆருக்கு பிறகு முதல்வரான விஜய்யின் கடைசி படமாக 'ஜனநாயகன்' வெளியாகி உள்ளது. இந்த படம் அவருக்கு எப்படி அமையப் போகிறது என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.

நேற்றே படம் பார்த்த முதல்வர் விஜய்

படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் நேற்றே முதல்வர் விஜய் ஜனநாயகன் படத்தை பார்த்தார். சென்னை, அடையாறில் உள்ள என்எப்டிசி பிரிவியூ தியேட்டரில் தனது பெற்றோர் மற்றும் நெருங்கி நட்பு வட்டத்துடன் ஜனநாயகன் படத்தை பார்த்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !