பிளாஷ்பேக்: மோகன் பாபுவை சூப்பர் ஸ்டாராக்கிய சத்யராஜ் படம்
பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடித்த படம் 'வேலை கிடைச்சிடுச்சு'. கவுதமி, சரத்குமார், விஜயகுமார், சுமித்ரா, ஆனந்தராஜ், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சத்யராஜ் அப்போது 'புரட்சித் தமிழன்' என்ற பட்டத்தோடு ஆக்ஷன் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரம். இந்த படமும் அதே பார்முலாவில் தயாரான படம். ஊரையே நாசமாக்கும் வில்லனை அந்த ஊருக்கு புதிதாக குடும்பத்தோடு குடியேறும் ஹீரோ எதிர்த்து நிற்கிற கதை. ஓரளவிற்கான வரவேற்பை படம் பெற்றது.
ஆனால் இந்த படம் மோகன் பாபு மற்றும் திவ்யா பாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க 'அசெம்பிளி ரவுடி' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆனது. இந்த படம் மோகன் பாபுவின் திரை வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய தொடக்கத்தை அளித்தது. தெலுங்கு பாக்ஸ் ஆபிசில் அதுவரை இருந்த சாதனைகளை முறியடித்தது. மோகன் பாபுவின் நடிப்பு மற்றும் பருச்சூரி கோபாலகிருஷ்ணாவின் தனித்துவமான வசனங்கள் படத்திற்கு ஒரு முக்கிய பலமாக அமைந்தன. சாதாரண நடிகராக இருந்த மோகன் பாபு இந்த படத்தின் மூலம் அப்போதைய சூப்பர் ஸ்டார் ஆனார்.
41 நாட்களில் எடுக்கப்பட்ட 'அசெம்பிளி ரவுடி', 25 வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. பின்னர் இது அனில் கபூர் மற்றும் ஜூஹி சாவ்லா நடிப்பில் 'லோபர்' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.