மனைவிக்கு அன்பை விட மரியாதை முக்கியம்: கோவையில் சூர்யா பேச்சு
சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரும் வரும் படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. மமிதா பைஜூ, ரவீனா டாண்டன், ராதிகா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வருகிற 14ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோவையில் நடந்தது. விழாவில் சூர்யா பேசியதாவது: கோவை என் சொந்த ஊர், எனது உறவுகள், சொந்தங்கள் இங்கே இருக்கிறார்கள். சில காரணங்களால் எனது பிறந்த நாளை கொண்டாடாவிட்டாலும் 5 ஆயிரம் பேர் ரத்ததானம் செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு தேடி தேடிச் சென்று பாடப்புத்தகங்கள் வழங்கி இருக்கிறார்கள். 12ம் வகுப்பு படிக்கும் வரை விடுமுறை காலங்களில் சூலூரில்தான் கழிப்பேன். நிலத்தில் உழுது, ஆடு மாடு மேய்த்து, கிணற்றில் குளித்த காலங்கள் நினைவுக்கு வருகிறது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பார்க்கும்போது உதட்டோரம் ஒரு சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும், ஹீரோவுக்கான விஷயங்களும் இருக்கும், காமெடியும் தனியா இருக்கும். ஹோம் எண்டர்டெயின்மெண்ட் படம், ரசிகர்களுக்கான படம், ரசிகர்களின் குடும்பங்களுக்கான படம். எனக்கு வெற்றி கொடுத்த ரசிகர்களுக்கும் இதை விட பல மடங்கு வெற்றி கிடைக்க வேண்டும். என்றார்.
பின்னர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, காதல் குறித்து கேட்டபோது அதற்கு பதிலளித்த சூர்யா, “காதல் என்பது தாலி கட்டும் நாளில் மட்டும் உணரப்படும் ஒன்று அல்ல. ஒவ்வொரு நாளும் காதலிக்க வேண்டும். 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தாலும் அந்த அன்பும், காதலும் தொடர வேண்டும். வாழ்க்கையில் காலம் மாறலாம், முன்னுரிமைகள் மாறலாம், மனிதர்களும் மாறலாம். ஆனால், நம் துணை மீது வைத்திருக்கும் அன்பு மட்டும் ஒருபோதும் மாறக்கூடாது.
ஒரு பெண் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைவதற்காக கடந்து வரும் பாதை, ஒரு ஆண் கடந்து வருவதை விட மிகவும் கடினமானது. ஒரு வீட்டை கவனித்துக் கொள்வதிலும், குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பதிலும் பெண்கள் எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். அந்த தியாகங்களுக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்.
உங்கள் துணைக்கு எப்போதும் மரியாதையும் அன்பும் குறையக் கூடாது. உண்மையில் காதலை விட மரியாதையை அதிகமாக அவர்களுக்குக் காட்டுங்கள். அந்த மரியாதையை வாழ்க்கை முழுவதும் உறுதியாக கடைபிடியுங்கள். இவ்வாறு பேசினார்.