மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி: புதிய கூட்டணி உருவானது
தமிழில் 'ஜெயம்' தொடங்கி, 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், தனி ஒருவன், வேலாயுதம், வேலைக்காரன்' உட்பட பல படங்களை இயக்கியவர் மோகன் ராஜா. தெலுங்கு 'லூசிபர்' படத்துக்கு பின் சில ஆண்டுகளாக அவர் படம் இயக்கவில்லை. 'தனி ஒருவன் 2' இயக்கும் திட்டமும் தள்ளிப்போனது.
இந்நிலையில் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார் என அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதை பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. அனுமன் ஜங்ஷன் என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2001ம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. அந்த வகையில் தனது சினிமா பயணத்தில் 25வது ஆண்டில் இந்த படத்தை இயக்குகிறார். இது கார்த்தி நடிக்கும் 30 அல்லது 31வது படம் எனக் கூறப்படுகிறது. இப்போது 'சர்தார் 2, மார்ஷல்', ஒரு தெலுங்கு இயக்குனர் படம் ஆகிய படங்களில் கார்த்தி நடித்து வருகிறார். பேமிலி என்டர்டெயின்ராக உருவாகும் இந்த படத்தின் மற்ற நடிகர் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.