பிளாஷ்பேக்: முதல் மூன்று திரைப்படங்களில் முத்திரை பதித்த இயக்குநர் ஆர் கே செல்வமணி
பொதுவாகவே திரைத்துறையில் ஒரு அறிமுக இயக்குநர் என்பவர், தான் இயக்கிய முதல் திரைப்படத்தின் வெற்றியைப் போலவே, தனது அடுத்தடுத்த படைப்புகளையும் வெற்றித் திரைப்படங்களாக தருவது என்பது சாத்தியமற்ற ஒன்று. இயக்குநர் பாரதிராஜா அதை சாத்தியப்படுத்தியிருந்தார்.
தனது முதல் படமான “16 வயதினிலே” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த அவரது “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்” ஆகிய திரைப்படங்களையும் வெற்றித் திரைக் காவியங்களாகவே தந்திருந்தார். அந்த வரிசையில் 90களில் ஒரு அறிமுக இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு வந்தவர்தான் இயக்குநர் ஆர் கே செல்வமணி. இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த இவரும் தனது முதல் மூன்று படைப்புகளை வெற்றித் திரைப்படங்களாகத் தந்து தமிழ் திரையுலகை அலங்கரித்திருந்தார்.
1970களின் பிற்பகுதியில் வெளிவந்த “அவள் அப்படித்தான்” என்ற திரைப்படத்தின் மூலமாக, திரைப்படக் கல்லூரி மாணவர்களின் வருகைக்கு வித்திட்ட ஒரு இயக்குநராக பார்க்கப்பட்டவர் இயக்குநர் சி ருத்ரய்யா. இருந்தாலும், 1985ம் ஆண்டு வெளிவந்த “ஊமை விழிகள்” திரைப்படத்திற்குப் பின்னர் தான் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆதிக்கம் தமிழ் திரையுலகில் மேலோங்கத் துவங்கியது. அந்த வரிசையில், அதன் நீட்சியாக ஒரு திரைப்படக் கல்லூரி மாணவனாக தனது முதல் படைப்பான “புலன் விசாரணை” திரைப்படத்தை தந்து, தமிழ் திரைத்துறையில் தனது கணக்கை ஆரம்பித்தார் இயக்குநர் ஆர் கே செல்வமணி. “புலன் விசாரணை” திரைப்படம் அப்போது தமிழ் நாட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த 'ஆட்டோ சங்கர்' என்ற ஒரு கொலைக் குற்றப் பின்னணியில் உள்ள ஒருவரின் வாழ்க்கைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
தமிழ் நாட்டிலிருந்து மும்பைக்கு வேலை தேடிச் செல்லும் ஏழை தொழிலாளர்களிடம் அவர்களுக்கே தெரியாமல் அவர்களது கிட்னியை திருடும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதற்குப் பின்னணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் என இவர்களோடு ஆட்டோ சங்கர் வாழ்க்கையையும் இணைத்து, திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ஆர் கே செல்வமணி. தயாரிப்பாளர் அ செ இப்ராஹிம் ராவுத்தர் தயாரிக்க, நடிகர் விஜயகாந்த் நாயகனாகவும், நடிகர் சரத்குமார் வில்லனாகவும் நடித்திருந்த இத்திரைப்படம், 1990ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்து வெள்ளி விழா கொண்டாடியது.
தனது முதல் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை சுவைத்த இயக்குநர் ஆர் கே செல்வமணியின் இரண்டாவது படைப்பாக வெளிவந்த திரைப்படம்தான் “கேப்டன் பிரபாகரன்”. இத்திரைப்படத்தை தயாரித்திருந்ததும் தயாரிப்பாளர் அ செ இப்ராஹிம் ராவுத்தரே. படத்தின் நாயகனாக நடிகர் விஜயகாந்த் நடித்திருந்ததோடு, அவரது 100வது திரைப்படம் என்ற ஒரு பெருமைக்குரிய குறியீட்டோடு வெளிவந்த திரைப்படமாகவும் அவருக்கு அமைந்திருந்தது.
இத்திரைப்படம் சந்தனமரக் கடத்தல் வீரப்பனை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். மக்களுக்கு வீரப்பன் யார்? அந்த நபரின் உருவம் எப்படி இருக்கும்? என்று ஏதும் அறியாதிருந்த 90களின் ஆரம்பத்தில், வீரப்பனுக்கு ஒரு உருவம் தந்து, வீரப்பனுக்கும், அரசியல்வாதிகளுக்கும், காவல்துறையினருக்கும் உள்ள தொடர்பினை வலியுறுத்திச் சொன்ன ஒரு படமாக வடிவமைத்து இயக்கியிருந்தார் ஆர் கே செல்வமணி.
வீரபத்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மன்சூரலிகானையும் இத்திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் ஆர் கே செல்வமணி. “கேப்டன் பிரபாகரன்” என்ற படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருந்த இத்திரைப்படமும் 200 நாட்களையும் கடந்து ஓடி, பாக்ஸ் ஆபிஸில் ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
முதல் இரண்டு திரைப்படங்களை நடிகர் விஜயகாந்த் என்ற ஒரு உச்ச நாயகனை வைத்து பிரமாண்டமான வெற்றித் திரைப்படங்களாகத் தந்த இயக்குநர் ஆர் கே செல்வமணி, தனது மூன்றாவது படைப்பான “செம்பருத்தி” திரைப்படத்தை ஒரு குறைந்த பட்ஜட் திரைப்படமாக தர முயற்சித்து, அன்றைய அறிமுக நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் பிரசாந்தை படத்தின் நாயகனாக ஒப்பந்தம் செய்திருந்தார். படத்தின் நாயகிக்காக பல முயற்சிகள் மேற்கொண்டு பின்னர் ஒரு தெலுங்கு படத் தயாரிப்பாளர் மூலம் நடிகை ரோஜாவின் அறிமுகம் கிடைத்து, அவரையே படத்தின் நாயகியாக்கினார் ஆர் கே செல்வமணி.
முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பை ஆரம்பிக்க இருந்த ஸ்ரீலதா என்ற அந்த இளம் பெண்ணை தனது “செம்பருத்தி” படத்தின் நாயகியாக்கினார். அன்றிலிருந்து அவரது பெயரும் ரோஜா என மாறியது. பழம்பெரும் நடிகை பி பானுமதி, நாசர், ராதாரவி, மன்சூரலிகான், எம் என் நம்பியார், வைஷ்ணவி, ராஜசேகர் என ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டமே நடித்திருந்த இத்திரைப்படத்தின் இசையை இளையராஜா வழங்க, பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, படமும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி அடைய, இயக்குநர் ஆர் கே செல்வமணிக்கும் ஒரு ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து இன்ப அதிர்ச்சியை வழங்கியது இந்த “செம்பருத்தி”. இப்படி தொடர் வெற்றிகளைத் தந்ததன் காரணமாக 1990களில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலிலும் முதன்மையான ஓர் இடத்தைப் பிடித்திருந்தார் இயக்குநர் ஆர் கே செல்வமணி.