துல்கர் படத்தைப் பார்த்து போலீஸ் அதிகாரியாக ஏமாற்றிய நபர் போக்சோவில் கைது
கடந்த 2014ல் மலையாளத்தில் துல்கர் சல்மான், உன்னி முகுந்தன் நடிப்பில் 'விக்ரமாதித்யன்' என்கிற படம் வெளியானது. இதில் ஐ.பி.எஸ் அதிகாரியாக முயற்சி செய்யும் ஆதித்யன் என்கிற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். படத்தில் இறுதியில் அவர் ஐ.பி.எஸ் அதிகாரியாகவும் மாறுவார். இந்த நிலையில், கோட்டயம் வடவத்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஆதித்யன் என்பவர் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, துல்கர் சல்மான் போலவே தன்னை நினைத்துக் கொண்டு தானும் ஒரு போலி ஐ.பி.எஸ் அதிகாரியாகக் காவல்துறை அதிகாரிகளை ஏமாற்றி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் தன்னை ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக வெளிப்படுத்திக் கொண்ட இவர், பல்வேறு வழக்குகளில் தேவையற்ற தலையீடுகளைச் செய்ததுடன், தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்கிற தோரணையைப் பயன்படுத்தி பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணமோசடியும் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு சிறுமியிடம் பழக்கத்தை ஏற்படுத்தியவர், அவரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவரை கர்ப்பமாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரிலேயே இவரின் சுயரூபம் தெரியவந்து, தற்போது இவர் மீது போக்சோ வழக்கு மற்றும் வேலை மோசடி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் வரும் போலீஸ் அதிகாரியைப் பார்த்து நிஜமாகவே முன்னேற துடிக்காமல், முறையற்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.