சத்தமின்றி ஹிட் அடிக்கும் ஹனுமான் அன்ஷ்
விஷால் சதுர்வேதி இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகியுள்ள படம் ஹனுமான் அன்ஷ். வேப்பிலை பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பக்தி படத்தில் சந்தன் ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று பெரிய ஆரவாரமின்றி திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் சுமார் ரூ.10 லட்சம் என்ற அளவில் மட்டுமே வசூலித்தது. ஆனால், ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்கள் இப்படத்திற்கு பின்னர் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்த வாரங்களில் ஹனுமான் அன்ஷ் படத்தின் வசூல் வேகமெடுத்து, இப்போது உண்மையான ஒரு ஸ்லீப்பர் ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது. தற்போது, 25வது நாளிலும் ஹனுமான் அன்ஷ் பெரிய அளவில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. தற்போதைய தகவல்படி, சமீபத்தில் வெளியான ரவி தேஜாவின் இருமுடி 24 மணி நேரத்தில் 139.43K மற்றும் யஷின் டாக்சிக் 119.32K டிக்கெட்டுகள் விற்பனையான நிலையில், இப்படம் 168.69K டிக்கெட்டுகளைப் பதிவு செய்து முன்னணியில் உள்ளது.
மேலும், முதல் நாளில் வெறும் ரூ.10 லட்சம் வசூலுடன் தொடங்கிய ஹனுமான் அன்ஷ், நான்காவது வாரத்திலும் வெற்றிப்பயணத்தை தொடரும் நிலையில், 25வது நாளில் இந்தியாவில் நிகர வசூலாக சுமார் ரூ.45 கோடியையும், உலகளவில் மொத்த வசூலாக சுமார் ரூ.54 கோடியையும் எட்டியுள்ளது. ஆனால் இப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 2 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.