நெட்பிளிக்சில் டாப் -10 வரிசையில் உலகளவில் 3-வது இடத்தைப் பிடித்த ஆல்பா
ஒய்.ஆர்.எப் ஸ்பை யூனிவர்ஸின் புதிய வரவும், அந்த வரிசையின் முதல் பெண் மையக் கதைக்களம் கொண்ட ஸ்பை த்ரில்லர் படம் ஆல்பா. சிவ் ரவைல் இயக்கிய இப்படம் கடந்த ஜூலையில் திரைக்கு வந்தது. ஆகஸ்ட் 28ல் இப்படம் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் நெட்பிளிக்ஸின் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களின் உலகளாவிய டாப் 10 தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து இப்படம் சாதனை படைத்துள்ளது. ஆலியா பட் மற்றும் ஷர்வரி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நெட்பிளிக்ஸ் இந்தியா திரைப்படப் பட்டியலிலும் முதலிடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
சிவ் ரவைல் இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம், ஒய்.ஆர்.எப் ஸ்பை யூனிவர்ஸின் பின்னணியில் ஆபத்தான உயர்மட்ட மிஷன் ஒன்றை எதிர்கொள்ளும் இரண்டு சிறப்பு முகவர்களின் கதையை விவரிக்கிறது. இதில் பாபி தியோல் மற்றும் அனில் கபூர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆலியா பட் - ஷர்வரி காம்போ படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சி அமைப்பு ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன. நெட்பிளிக்ஸ் தளத்தில் கிடைத்துள்ள இந்த வரவேற்பு, சர்வதேச அளவிலான பல நாடுகளின் டாப்- 10 பட்டியலிலும் ஆல்பா இடம்பெற உதவியுள்ளது.
நெட்பிளிக்ஸில் கிடைத்துள்ள இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஆல்பா படம் இந்தியாவைத் தாண்டி உலகளாவிய ரசிகர்களைச் சென்றடைவதோடு, ஒய்.ஆர்.எப் ஸ்பை யூனிவர்ஸிற்கு மற்றொரு சிறப்பான அத்தியாயத்தையும் சேர்த்துள்ளது. உலகளாவிய ஓடிடி தளங்களில் இந்திய திரைப்படங்களுக்கு அதிகரித்து வரும் சர்வதேச ஆதரவையும் இப்படத்தின் தரவரிசை படம் பிடித்துக் காட்டுகிறது.