கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம்: வெப் தொடராக வெளியாகிறது
சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி பல திரைப்படங்கள், வெப் தொடர்கள், ஆவணப் படங்கள் வெளிவந்துள்ளன. 'கூச முனுசாமி வீரப்பன்' என்கிற புதிய ஆவணத் தொடர் கடந்த 2023 ஆண்டு வெளியானது. வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர்களின் அனுபவங்கள், அவர்கள் எடுத்த வீடியோக்கள் இந்த தொடரில் இடம்பெற்றது. அதோடு வீரப்பனோடு நெருக்கமாக இருந்தவர்கள், வீரப்பனை பிடிக்கும் படையில் இருந்த அதிகாரிகளின் அனுபவங்களும் இந்த தொடரில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் தற்போது கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியது எப்படி, அவரோடு காட்டுக்குள் நாட்களை கடத்தியது எப்படி. பின்னர் அவரை ஒப்படைத்தது எப்படி? இந்த விஷயத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பங்கு என்ன என்பது குறித்த ஆவணத் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதில் இதுவரை வெளிவராத வீடியோக்கள், படங்கள், நேர்காணல்கள் இடம்பெறுகிறது. இது முன்பு வெளியான 'கூ.ச.முனுசாமி வீரப்பன்' தொடரின் 2வது சீசனாக வெளியாகிறது. வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.