குழந்தை தான் முக்கியம், பிக்பாஸ் முக்கியமல்ல : ஆடை வடிமைப்பாளர் ஜாய் கிரிசில்டா
பிரபல ஆடை வடிமைப்பாளரும், மாதம்பட்டி ரங்கராஜ் உடன் சர்ச்சையில் சிக்கியவருமான ஜாய் கிரிசில்டா, நாளை தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 10ல் போட்டியாளராக பங்கேற்க போகிறார் என செய்திகள் கசிந்த நிலையில், அவர் அளித்த விளக்கம்...
கடந்த சில நாட்களாக நான் பிக் பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் நுழையப் போவதாக வெளிவந்த செய்திகள் வைரலாகி வருகின்றன. உண்மையிலேயே எனக்கு கிடைத்த அன்பு, ஆதரவு, அழைப்புகள், செய்திகள் மற்றும் வாழ்த்துகளைக் கண்டு நான் நெகிழ்ந்து போனேன். முதலில், இப்படிப்பட்ட ஒரு அருமையான வாய்ப்பிற்கு என்னைப் பரிசீலித்துத் தேர்வு செய்ததற்காக விஜய் டிவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் மிகவும் நன்றியுடனும் பெருமையுடனும் உணர்கிறேன்.
ஆனால், நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பிக் பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் செல்லவில்லை. இதற்கு முக்கியக் காரணம் என் குழந்தை ராகா (Ragha) தான். அவன் இன்னும் சிறிய குழந்தை; அவனை விட்டுவிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வது ஒரு தாயாக எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. எனவே, இந்த வாய்ப்பு என்னை நாடி வந்தபோது, அதை மரியாதையுடன் மறுத்துவிட முடிவெடுத்தேன். இது எளிதான முடிவல்ல, ஆனால் என்னைப் பொறுத்தவரை எப்போதுமே என் குழந்தைக்குத்தான் முதலிடம். என் மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.