'பீப்' டைட்டிலுக்கு என்ன அர்த்தம்
தமிழ் சினிமாவில் ஒரே ஒரு வெற்றிக்காக போராடி வருகிறவர்களில் ஒருவர் ராகவ். 'எந்திரன்', 'நஞ்சுபுரம்', 'வேலாயுதம்', 'கல்யாண சமையல் சாதம்' உள்ளிட்ட படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். இவரது நடிப்பில் அடுத்ததாக 'பீப்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இல. சண்முகசுந்தர் இயக்கியுள்ள இப்படம் ஒரு கிரைம் திரில்லர் ஆக உருவாகி இருக்கிறது.
படம் குறித்து ராகவ் கூறும்போது, “நாம் ஒரு விஷயம் கேட்க வேண்டாம் அல்லது கேட்கக் கூடாது என அதை கட் பண்ண நினைத்தால் அந்த இடத்தில் ஒரு 'பீப்' போடுகிறோம் அதாவது துண்டிக்கப்பட்ட குரல்கள் என்று சொல்வார்களே அதுபோல சொல்லப்படாதவை என்று இந்த 'பீப்' டைட்டிலுக்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் வழக்கமாக நிறைய சொல்லப்படாத விஷயங்களை இந்த படத்தில் தொட்டிருக்கிறோம். அதாவது படம் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பை குறிவைக்கும் ஒரு கிரைம் திரில்லர் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
படத்தின் ஹீரோவுக்கு ஒரு சூப்பர் பவர் இருக்கு என்றாலும் அவர் சூப்பர் மேன் கிடையாது. அதேசமயம் சூப்பர் பவர் என்பது நார்மலான ரியல் லைப்பில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தான் இதில் அழகாக உருவாக்கி இருக்கிறோம். என்னைத் தேடி ஒரு கதாபாத்திரம் வரும்போது இது ஈசியாக பண்ணி விடலாமே என்பது போல இருந்தால் அதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும் ? அதே சமயம் அதை என்னால் பண்ண முடியும் என்கிற கதாபாத்திரமாகவும், என்னால் முடியுமா? என்று ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தால் அது சுவாரசியமாக இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறது.
'தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி செய்தது போல ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ரொம்ப நாளாக ஆசை. இது தவிர நானும் சொந்தமாக சில ஸ்கிரிப்ட்டுகள் எழுதி வைத்திருக்கிறேன்.. அதை எல்லாம் எடுக்க வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது” என்று கூறினார் ராகவ்.