PUBLISHED ON : ஜூலை 02, 2025 12:00 AM

தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர் விஜய பிரபாகரன்: தி.மு.க., -- அ.தி.மு.க.,வோடு கூட்டணி வைப்பதற்கு, எங்களுக்கு எந்த சங்கடமும் கிடையாது. தே.மு.தி.க.,வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து ஜன., 9ல் அறிவிப்போம். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில், 2011 தேர்தலில் 29 எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு சென்றனர். அதுபோல், வரும் தேர்தலில் பிரேமலதா தலைமையில் பல எம்.எல்.ஏ.,க்கள் செல்வர்.
டவுட் தனபாலு: கூட்டணிக்கான கதவுகளை, ரெண்டு கட்சிகளுக்கும் திறந்தே வச்சிருக்கீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது... அதே நேரம், 2011ல் விஜயகாந்த் தலைமையில் இயங்கிய உங்க கட்சி, அதே பலத்தோடு தான் இப்பவும் இருக்கா என, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் யோசித்து பார்க்குமே என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் சிதறக்கூடாது என்ற நோக்கத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளோம். இதனால், 'அ.தி.மு.க.,வை பா.ஜ., கபளீகரம் செய்துவிடும்' என சிலர் தெரிவிக்கின்றனர். கருணாநிதியாலேயே அ.தி.மு.க.,வை அழிக்க முடியவில்லை. 31 ஆண்டுகள் ஆட்சி செய்து, பொன்விழா கண்ட அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது.
டவுட் தனபாலு: வெளியில தி.மு.க.,வை தாக்குவது போல தான் தெரியுது... ஆனா, 'அவ்வளவு பெரிய ராஜதந்திரியான கருணாநிதியாலே எங்க கட்சியை அழிக்க முடியலை... அமித் ஷா எல்லாம், எங்க கட்சியை தொட்டுக்கூட பார்க்க முடியாது' என உங்களது, 'மைண்ட் வாய்ஸ்' சொல்வது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: கும்பாபிஷேகத்தை, நாங்கள் தமிழில் நடத்துவோம் என்று தெரிந்துதான், திருச்செந்துார் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என, சீமான் கோரிக்கை விடுத்தார். சீமான் போன்றோர் உபதேசத்தை கேட்டு ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. திருச்செந்துார் கும்பாபிஷேகத்துக்கான, 95 சதவீத பணிகள் முடிந்து விட்டன. தமிழ்க்கடவுள் முருகன் மகிழ்ச்சியடையும் வகையில், கும்பாபிஷேகம் நடைபெறும்.
டவுட் தனபாலு: நல்லா நடத்துங்க... அதே நேரம், எல்லா மதத்துக்கும் பொதுவானவர் என்பதால், முதல்வரையும் அழைத்து, அவரது தலைமையில் திருச்செந்துார் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தினால், 'டவுட்'டே இல்லாம தங்களையும், தி.மு.க., அரசையும் பாராட்டலாம்!