PUBLISHED ON : ஜூலை 03, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: திருமாவளவன் பலம் அவருக்கே தெரியவில்லை. தி.மு.க.,வை விட, அதிக ஓட்டு வங்கி வி.சி., கட்சிக்கு உள்ளது. ஓட்டு வங்கியை வைத்து சீட் பெற வேண்டும் என்ற எண்ணம், திருமாவளவனுக்கு இல்லை. அவர், தன் செல்வாக்கை சீட் வாங்கும் விஷயத்தில் பயன்படுத்த வேண்டும். வி.சி.,க்கள் ஓட்டு மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுகளை கழித்து பார்த்தால், தி.மு.க.,வுக்கென எந்த ஓட்டு வங்கியும் கிடையாது.
டவுட் தனபாலு: அது சரி... இப்படி உசுப்பேற்றி, அவரும் தி.மு.க.,விடம் கூடுதல் சீட்கள் கேட்டு முரண்டு பிடிக்கணும்... அவங்க தர மறுத்தால், கூட்டணியில் இருந்து வி.சி., வெளியேறி வரணும்... அப்படி வந்தால், உங்க அணியில் சேர்த்துக்கலாம்னு, 'கொம்பு சீவி' விடுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: 'கூட்டணி ஆட்சி இல்லை. அ.தி.மு.க., அதற்கு உடன்படாது' என்ற பதிலை பா.ஜ.,வினருக்கு பழனிசாமி கூறியிருக்கிறார். அதேபோல், 'அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது' என்ற கருத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார். கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சிக்கின்றனர் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
-டவுட் தனபாலு: தி.மு.க.,வை மறைமுகமா மிரட்டுவதற்கு தானே, '234 தொகுதியிலும் போட்டியிடும் தகுதி வி.சி.,க்களுக்கு உண்டு'ன்னு நீங்களும் அடிக்கடி சொல்றீங்க... அதே மாதிரி தான் பழனிசாமியும், பா.ஜ.,வுக்கு இலைமறை காய் மறையா எச்சரிக்கை விடுத்திருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
த.வெ.க., கொள்கை பரப்பு பொதுச்செயலர் அருண்ராஜ்: நடிகர் விஜயின் கோட்டையாக தமிழகம் மாறி வருகிறது. விஜய் களத்துக்கு வரவில்லை என யார் கூறியது? 25 ஆண்டுகளாக அவர் களத்தில் தான் உள்ளார். சமீபத்தில் கூட பரந்துார் சென்று வந்தார். அவரது படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து விட்டார். வெளியே வர விஜய் தயாராக இருக்கிறார்; பொதுமக்களுக்கு பாதுகாப்பு தர போலீஸ் தயாராக உள்ளதா? பொதுமக்களின் நலனுக்காக, விஜய் அமைதியாக இருக்கிறார்.
டவுட் தனபாலு: மாபெரும் மக்கள் தலைவரான எம்.ஜி.ஆரே பொதுமக்களுடன் கலந்து பழகிதான் அரசியல்ல ஜொலித்தார்... அவரை விட விஜய் பெரிய தலைவர்னு சொல்றீங்களா... உங்களது இந்த சால்ஜாப்பு, 'ஆட தெரியாத நாட்டியக்காரி, தெரு கோணல்'னு சொன்ன கதையா இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!