PUBLISHED ON : ஜூலை 03, 2025 12:00 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
திருப்புவனம் போலீஸ் நிலையத்தில், அஜித்குமார் மரணித்த பின்,
தி.மு.க.,வினரை வைத்து பஞ்சாயத்து பேசி முடித்துக் கொள்ள, காவல்
துறையினர் எடுத்த முயற்சி என்பது, தமிழகத்தில் நடக்கும்
கீழ்த்தரமான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு. இந்த அரக்கத்தனமான
சம்பவத்திற்கு, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர்
ஸ்டாலின், முழுமையாக பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை
நேரில் சந்தித்து மன்னித்து விடுங்கள் என, ஆறுதல் கூற வேண்டும்.
அ.தி.மு.க.,
ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் தந்தை - மகன் கொலையை வைத்து அரசியல்
பண்ணிய தி.மு.க.,வுக்கு, திருப்புவனம் சம்பவம் பெரிய
கரும்புள்ளிதான்!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும், 'போஷான் அபியான்' திட்டத்தில், தமிழகம் முழுதும், 500க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மூன்று மாதங்களாக, சம்பளம் வழங்கப்படவில்லை. சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை. நிதி வந்ததும் ஊதியம் வழங்கப்படும்' என தெரிவித்துள்ளனர். மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியை பெற்று, சம்பளத்தை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை. மத்திய அரசும் நிதியை விடுவிக்க வேண்டும்.
எல்லாத்துக்கும் மத்திய அரசை கைகாட்டினா, மாநில அரசு எதற்கு இருக்காம்?
இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: அ.தி.மு.க.,வை உருட்டி மிரட்டி கூட்டணிக்கு பா.ஜ., பணிய வைத்துள்ளது. இவர்கள் கூட்டணிக்கு கருவே உருவாகவில்லை. பழனிசாமியை முதல்வராக கூட மத்திய அமைச்சர் அமித் ஷா ஏற்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி இல்லை. ஆனால், ஆட்சியில் பங்கு என அமித் ஷா சொல்கிறார்.
இதெல்லாம் தி.மு.க., கூட்டணி தோல்வி அடைந்தால் தானே நடக்கும்... அப்படி எல்லாம் நடக்காது என்ற நம்பிக்கை இவருக்கு இல்லையோ?
மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் பேட்டி: கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பதுமட்டும் தான் இப்போதைய கோரிக்கை. எத்தனை தொகுதி என்பது, பேச்சுவார்த்தையின் மூலம் தான் இறுதி செய்யப்படும். தி.மு.க., தரப்பில், சீட் விவகாரத்தில் எந்த அழுத்தமும் கிடையாது.எத்தனை தொகுதிகள் கொடுத்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது, நாங்கள் எடுக்க வேண்டிய முடிவு. தோழமை கட்சிகளோ, கூட்டணி தலைமை கட்சியோ எங்களுக்கு உத்தரவிட முடியாது.
இவங்க, 25 இடங்களில் நிற்கணும்னு முடிவு எடுத்தாலும்,கூட்டணி தலைமை ஏத்துக்கணும்னு எதிர்பார்க்கிறாரோ?