எதிர்க்கட்சியாக பா.ஜ., தோல்வி சொந்த கட்சி 'மாஜி' விளாசல்
எதிர்க்கட்சியாக பா.ஜ., தோல்வி சொந்த கட்சி 'மாஜி' விளாசல்
ADDED : ஜூலை 27, 2024 10:56 PM

பெங்களூரு: 'டெங்கு பாதிப்பு குறித்து சட்டசபையில் பேசாமலும், அரசின் முறைகேடுகள் குறித்து சரியாக முன்னிலைப்படுத்தாமலும், எதிர்க்கட்சியாக பா.ஜ., தோல்வி அடைந்து விட்டது' என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் அரவிந்த லிம்பாவளி அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளார்.
'எக்ஸ்' வலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை:
ஐ.டி., -- பி.டி., தலைநகராக விளங்கி, அறிவியல் துறையிலும், நாட்டுக்கு முன்னோடியாக திகழும் பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் டெங்கு தாண்டவமாடுகிறது. பல பகுதிகளில் கன மழை பெய்து, மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். இது குறித்து, எங்கள் கட்சி தலைவர்கள் சட்டசபையில் விவாதிக்காமல் போனது துரதிர்ஷ்டம்.
எங்கள் கட்சியின் மாநில தலைவருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது.
இதனை தங்களுக்கு லாபமாக ஆளுங்கட்சி பயன்படுத்தி கொண்டது. இம்முறை சட்டசபை கூட்டத்தொடரில் நேரம் விரயம், ஆளுங்கட்சியுடன் இணைந்து சட்டசபையை முடக்கிய எங்கள் கட்சி தலைவர்களின் செயல்பாடு குறித்து கேள்வி எழுகிறது.
மூடா, வால்மீகி, எஸ்.சி., - எஸ்.டி., பணம் பயன்பாடு இப்படி பல முறைகேடுகள் குறித்து சரியான பாதையில் முன்னிலைப்படுத்தாமல், எதிர்க்கட்சி தலைவர்கள் தோல்வி அடைந்தனர். ஆளுங்கட்சியுடன், எதிர்க்கட்சியும் கூட்டு சேர்ந்து விட்டதா என்று மக்களுக்கு தோன்றியது.
ஒட்டுமொத்தமாக இம்முறை கூட்டத்தொடரில், எதிர்க்கட்சியாக பா.ஜ., முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. விரல் விட்டு எண்ணும் அளவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் இருந்த போதும் ஆர்ப்பரித்த பா.ஜ.,வின் தற்போதைய நிலையை பார்க்கும் போது, வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.