
கணேஷுக்கு படபடப்பு
நடிகர் கணேஷ் நடிக்கும், கிருஷ்ணம் பிரணய சகி திரைப்படத்தின் முதல் பாடல், ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது மற்றொரு பாடலை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரொமாண்டிக் பாடல், ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆகஸ்ட் 15ல் படத்தை திரையிட படக்குழுவினர் தயாராகின்றனர். கணேஷும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.
இதுவரை குடும்ப பின்னணி கொண்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இப்போது திரைக்கு வரும், கிருஷ்ணம் பிரணய சகி மாறுபட்ட, திரில்லர் குடும்ப படமாகும். இது கணேஷ் நடிக்கும், 41வது படமாகும். படம் எப்போது திரைக்கு வரும் என, படபடப்பில் இருக்கிறார்.
ரசிகர்கள் ஆர்வம்
துனியா விஜய் முதன் முறையாக இயக்கி, நடித்த சலகா அமோக வெற்றி பெற்றது. உற்சாகமடைந்த அவர், தற்போது பீமா படத்தை இயக்குவதுடன், நாயகனாகவும் நடித்துள்ளார். படம் சென்சாருக்கு சென்று வந்தது. படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. தன் வாழ்க்கையில் சந்தித்த உண்மை சம்பவங்களை, தன் படத்தில் துனியா விஜய் பயன்படுத்தியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்கள், டீசர், டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஆகஸ்ட் 9ல் மாநிலம் முழுதும், 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
சர்வதேச திரைப்பட விழா
பிரபல இயக்குனர் நாகாபரணா மனைவி நாகினி, முதன் முறையாக இயக்கிய, ஜீனியஸ் முத்தா திரைப்படம், திரைக்கு வருவதற்கான தயார் நிலையில் உள்ளது. ஜீனியஸ் முத்தா கதாபாத்திரத்தில், மாஸ்டர் ஷ்ரேயஸ் ஜெய் பிரகாஷ் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் இவரது தாயார் லதா என்பது குறிப்பிடத்தக்கது.
மாறுபட்ட கதையில், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய ராகவேந்திரா நடித்துள்ளார். பிலிகிரிரங்கன மலையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தில் கிரிஜா லோகேஷ், சுந்தர் ராஜ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டு பெற்றுள்ளது. ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.
புதிய தயாரிப்பாளர்
மூத்த நடிகர் சிவராஜ்குமாரின் மகள் நிவேதிதா, திரையுலகில் நுழைந்துள்ளார். ஆனால் நடிகையாக அல்ல. தயாரிப்பாளராக. பையர் ப்ளை என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் ரச்சனா இந்தர் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்தந்த நொடி வாழ்க்கையை ரசிக்கும், எதிர்காலத்தை பற்றி கவலைப்படாத நேஹா என்ற கதாபாத்திரத்தில் ரச்சனா நடித்துள்ளார்.
இவரது பங்கு படப்பிடிப்பை முடித்துள்ளார். இன்னும் சில பகுதிகள் மட்டுமே பாக்கியுள்ளது. இவரது நடிப்பில் நானு மத்து குன்டா திரைப்படமும், படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரச்சனா நடித்துள்ளார்.
'கிராபிக்ஸ்' கலக்கல்
கன்னடத்தில் ஆன்மிகம், கடவுள் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் அவ்வப்போது திரைக்கு வருகின்றன. தற்போது இந்த வரிசையில் சிம்ஹ ரூபினி படமும் சேர்ந்துள்ளது. இது மாரம்மா தேவி தொடர்பான படம். படத்தில் கிராபிக்ஸ் விளையாடியுள்ளது. அரக்கனை வதம் செய்ய, பார்வதி தேவி ஏழு அவதாரங்களில் பூமிக்கு வருகிறார்.
இதில் ஏழாவது அவதாரம் மாரம்மா தேவி. இவரது மகிமை, அற்புதங்களை படத்தில் காண்பித்துள்ளனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அங்கிதா கவுடா, யஷஸ்வினி நாயகியராக நடித்துள்ளனர். பக்தி மணம் கமழும் படம், விரைவில் திரைக்கு வரும்.
நட்சத்திர பட்டாளங்கள்
தனஞ்செயா, சத்யதேவ் ஹீரோக்களாக நடிக்கும் ஜீப்ரா திரைக்கு வர, தயார் நிலையில் உள்ளது. இருவருக்குமே இது 26வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு படத்தின் ரீ மேக் ஆகும். இதில் பிரபல தமிழ் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூர், இசை அமைத்துள்ளார். தெலுங்கு காமெடி நடிகர் சுனில், ஊர்வசி ரவுடிலா உட்பட பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் சத்யதேவ் உள்ளார்.